உலகம்

அமெரிக்காவை தாக்குவதற்கு ஈரானுக்கு செயற்கைக் கோள் படங்களை அனுப்பிய சீனா: டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க தள படங்களை ஈரானுக்கு சீனா வழங்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடந்த ஜூலை மாதம் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்க தளத்தின் செயற்கைக்கோள் படங்களை ஈரானுக்கு சீனா வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜோர்டன் அமெரிக்க விமான தளம்

ஜோர்டனின் வடகிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளமான முவஃபாக் சால்டி விமானத் தள மீது 2026 ஜூலை 17 அன்று ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து சீன அமைப்புகள் வழங்கிய உயர்ரக செயற்கை கோள் புகைப்படங்களை கொண்டு, ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா தடை

இதையடுத்து ஈரானுக்கு செயற்கைக்கோள் படங்களை வழங்குவது அமெரிக்க மற்றும் கூட்டாளி நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறி மிசார்ட் விஷன், எர்த் ஐ மற்றும் சாங் குவாங் ஆகிய சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியா கூறுகையில், சீனா செய்த எதுவும் இந்த மோதலின் போக்கை எந்த வகையிலும் மாற்றவில்லை என தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், “அடிப்படையில் நாம் செய்வதைத்தான் அவர்களும் செய்கிறார்கள். சீனா நம்மை உளவு பார்க்கிறது; அதேபோல நாமும் அவர்களை உளவு பார்ர்கிறோம்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் ஓரளவுக்கு நன்றாகவே நடந்து கொண்டார்; நாங்களும் ஓரளவுக்கு நன்றாகவே நடந்துகொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

சீனா நிராகரிப்பு

இதையடுத்து ஜூலை 17 தாக்குதல் தொடர்பான படங்கள் குறித்து சீன அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் ஆதாரம் கோரியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அமெரிக்காவின் கவலைகளை சீனா தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும், இந்த நடவடிக்கையில் எந்த சீன நிறுவனங்களும் ஈடுபடவில்லை என்றும் சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் கூறுகையில், சீனா ஈரானுக்கு வழங்கும் உதவி சர்வதேச திட்டத்திற்கு உட்பட்டது என்றும், சில நபர்கள் இந்த மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியது.

SCROLL FOR NEXT