உலகம்

சீனாவின் பிரபல எவர்கிராண்ட் நிறுவனத் தலைவருக்கு ஆயுள் தண்டனை: நிதி மோசடி வழக்கில் தீர்ப்பு!

இந்த வீழ்ச்சி சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையை மட்டுமல்லாமல் முழுப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது.

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஹுய் கா யான் என்பவருக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஷென்சென் இடைநிலை மக்கள் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பில், ஹுய் கா யான் மீது நிதி மோசடி, சொத்துகளை தவறாகப் பயன்படுத்துதல், கார்ப்பரேட் லஞ்சம், மற்றும் போலியான கணக்கு அறிக்கைகளை உருவாக்கி கடன்களை மறைத்தது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, ஹுய் கா யானின் அனைத்துத் தனிப்பட்ட சொத்துகளையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவர்கிராண்ட் குழுமத்திற்கு 15.82 பில்லியன் யுவான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து செயல்பட்ட அவரது இரு மகன்கள் உட்பட 56 உயர் அதிகாரிகளுக்கும் 22 மாதங்கள் முதல் 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எவர்கிராண்ட் வீழ்ச்சி

ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஹுய் கா யான், கடன்களைக் கொண்டு தனது ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்கினார். எனினும், சீனா 2020-இல் ரியல் எஸ்டேட் கடன்களுக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியபோது, எவர்கிராண்ட் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி 2021-இல் சரிவைச் சந்தித்தது.

சுமார் $300 பில்லியன் டாலர் வரை கடனில் மூழ்கிய இந்நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் வீடுகளுக்காகப் பெற்ற கோடிக்கணக்கான தொகையை புதிய திட்டங்களுக்குத் திசைதிருப்பியதால் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதியிலேயே நின்றன. இந்த வீழ்ச்சி சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையை மட்டுமல்லாமல் முழுப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது.