உலகம்

தைவானில் ‘இந்தியத் தொழிலாளர்களுக்குத் தடை’ போஸ்டர்- இந்தியர்கள் மத்தியில் பரவும் அச்சம்!

இந்தியர்களுக்கு எதிரான இந்த போஸ்டர் தைவான் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

தைவானில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கயோசியுங் நகரில் உள்ள சியாவோகாங் மாவட்டத்தின் கேங்மிங் வார்டு தலைவரான லீ ஹங்-யி என்பவர் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைப்பாகை அணிந்த இந்தியரின் உருவத்தின் மேல் 'தடை' குறியீடு போட்ட சர்ச்சை விளம்பரப் பலகையை வைத்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் அவரிடம் கேட்டபோது, "நான் பொதுவாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிரானவன் அல்ல, இந்தியத் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் எதிரானவன்" என்று இனவெறியுடன் பேசியுள்ளார்.

இந்த போஸ்டர் தைவான் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, தைவானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொதுச் செயலாளரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜோசப் வூ இதற்குப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "ஒரு உள்ளூர் அரசியல்வாதி வெறும் கவன ஈர்ப்பிற்காக இப்படி செய்திருப்பதை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். வெளிநாட்டினரை அன்போடு வரவேற்கும் தைவான் சமூகத்தில் இத்தகைய இழிவான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா-தைவான் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்த நான் தொடர்ந்து பாடுபடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தைவானில் தற்போது 7,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். தைவான் குடியேற்றத் துறையின்படி, வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் இந்தியர்கள் 9-வது இடத்தில் உள்ளனர் என்று தெரியவந்தது.

இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய அங்கு வாழும் இந்திய ஆராய்ச்சி மாணவர் அற்பிதா, டிக்டாக் மற்றும் த்ரெட்ஸ் செயலிகளில் இந்தியாவிற்கு எதிராகப் பரப்பப்படும் போலிப் பிரச்சாரமே இந்த இனவெறி போஸ்டருக்குக் காரணம் என்றும் தைவான் மக்கள் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக இனவெறியைக் காட்டுவதில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் நிலவும் இந்திய எதிர்ப்பு அலையைத் தனது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தி இளம் வாக்காளர்களைக் கவரவே, இந்த வேட்பாளர் இத்தகைய கீழ்த்தரமான உத்தியைக் கையாண்டுள்ளார் என்று தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் சுவம் பால் இந்தச் சர்ச்சையின் பின்னணியை விளக்கியுள்ளார். தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க, தைவான் அரசு இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன் மூலம் 1 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை தைவான் அரசு அழைத்து வரப்போவதாக ஒரு சில உள்ளூர் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தவறான வதந்திகளையும், பய உணர்வையும் உருவாக்கியுள்ளனர்.

ஆனால், கடுமையான விதிமுறைகள் மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே இந்தியர்கள் இங்கு வேலைக்கு வர முடியும் என்பதே உண்மை என தெரிவித்துள்ளார்.