உலகம்

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

நாட்டின் கிழக்கு பகுதியில் புளோரஸ் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 11 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது திரும்பப் பெறப்பட்டது.

அந்த தீவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டது. இந்தத் தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம்.

நிலநடுக்கத்தால் அங்கு பல்வேறு கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதும் உயரமான கட்டிடத்தின் மீது மக்கள் ஏறி உள்ளனர்.

நிலநடுக்கத்தால் பலர் தீவிர காயமடைந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 1992-ம் ஆண்டில் இந்த தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அலைகள் எழுந்தன. அதில் சிக்கி சுமார் 2,500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.