உலகம்

பிரிட்டனின் அடுத்த பிரதமர்? யார் இந்த ஆண்டி பர்ன்ஹாம்?

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருடன் ஒப்பிட்டு வடக்கு மன்னர் என்ற பட்டத்தை ஆண்டி பர்ன்ஹாமுக்கு வழங்கியுள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர் என்ற இரு பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார் கெய்ர் ஸ்டார்மர். இதனால் அந்த வெற்றிடத்தை யார் நிரப்பப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கேள்விக்கு பதிலாகும் வகையில், அடுத்த பிரதமர் இவர்தான் என பிரிட்டனின் ‘வடக்கு மன்னர்’ என அழைக்கப்படும் தொழிலாளர் கட்சியின் ஆண்டி பர்ன்ஹாம் முன்னிறுத்தப்படுகிறார்.

யார் இந்த ஆண்டி பர்ன்ஹாம்?

ஆண்ட்ரூ முர்ரே பர்ன்ஹாம், 1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வடமேற்கு இங்கிலாந்தின் மெர்சிசைட் நகரில் பிறந்தார். நீண்டகாலமாக தொழிலாளர் கட்சியில் பயணித்த இவர், 2001 முதல் 2017 வரை லே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

இந்த காலக்கட்டத்தில், முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் அரசின் தலைமைச் செயலாளர், கலாச்சாரச் செயலாளர் மற்றும் சுகாதாரச் செயலாளர் உள்ளிட்ட பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தார்.

இதனையடுத்து இரண்டுமுறை தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அந்த இரண்டு முறையும் அவர் வெற்றி பெறவில்லை. இதனைத்தொடர்ந்து 2017 முதல் 2026 வரை கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியின் மேயராக பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில்தான் பர்ன்ஹாம் என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

2020 அக்டோபரில், பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள மான்செஸ்டர் நகரில் கோவிட் பாதிப்பு அதிகரித்தபோது, மத்திய அரசு அங்கு மிகக் கடுமையான 'டயர் 3' ஊரடங்கை அமல்படுத்த முயன்றது. ஆனால், போதிய நிதி உதவி இல்லாமல் ஊரடங்கை ஏற்க முடியாது என்று மேயராக இருந்த ஆண்டி பர்ன்ஹாம் போரிஸ் ஜான்சன் அரசுடன் நேருக்கு நேர் கடுமையான மோதலில் ஈடுபட்டார்.

இவ்வாறு வட பகுதி மக்களின் உரிமைகளுக்காக போராடியதால், ஊடகங்களும், பொதுமக்களும் அவரை 'வடக்கின் ராஜா' என்று அழைக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இவர் வெற்றிப் பெற்றதன்மூலம் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் திரும்புகிறார்.

இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முதல்நாள், “மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் , எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தொழிலாளர் கட்சித் தலைமைப் போட்டியில் நுழைந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு போட்டியாக இருப்பேன் என சவால் விடுத்தார்.

இந்நிலையில் இவர் பிரதமர் வேட்பாளராக அறியப்படுகிறார். ஸ்டார்மர் மீதான அதிருப்தியால், தொழிலாளர் கட்சியை மக்களிடம் மீண்டும் இணைக்கக்கூடிய ஒரு சக்தியாக பர்ன்ஹாமை அவர் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் வடக்கு மன்னர் என்ற பட்டம்பெற்று ஒரு பகுதி மக்களின் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளதால், அவரது செல்வாக்கு வடக்கு இங்கிலாந்தைத் தாண்டிச் செல்லுமா என்பதுதான்.