உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகளை அகற்ற தயாராகி விரும் இங்கிலாந்து கடற்படை..!

அமெரிக்கா- ஈரான் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்ட உடன், கண்ணி வெடிகளை அகற்ற இங்கிலாந்து கடற்படை வீரர்கள் தயாராக உள்ளனர்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய தடமாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான், கண்ணி வெடிகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அமெரிக்கா உள்ளிட்ட எதிரி கப்பல்கள் அத்துமீறினால் அவற்றை தாக்குவதற்கு எனக் கூறப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தம்

அமெரிக்கா- ஈரான் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா கூட்டு நாடுகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன்பின் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான பெருமளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது, என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தயாராக இருக்கும் இங்கிலாந்து கடற்படை வீரர்கள்

இதனால் விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானால் அமைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற, கடற்படை கப்பலில் நூற்றுக்கணக்கான வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் பகுதியில் RFA Lyme Bay கப்பல் நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பலில்தான் வீரர்கள் தயாராக உள்ளனர்.

ஒப்பந்தம் எட்டப்பட்டதும் கண்ணி வெடிகளை அகற்றும் கருவிகளுடன் இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்திக்கு விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் உடனான சண்டையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நடைபெற போர்க்கப்பல்களை அனுப்ப டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால் எந்த நாடும் முன்வரவில்லை. இதனால் டிரம்ப் கூட்டு நாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.