பிரிட்டனின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் 65,000-க்கும் அதிகமான பயணிகள் விமான நிலையங்களிலும், விமானங்களுக்குள்ளேயும் பல மணி நேரம் தவித்துப்போயினர்.
பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்தை நிர்வகிக்கும் 'நேஷனல் ஏர் டிராஃபிக் சர்வீசஸ்' அமைப்பின் ‘ஃப்ளைட்-பிராசஸிங்’ சிஸ்டத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி விமானங்களின் இயக்கம் உடனடியாகக் குறைக்கப்பட்டது.
பின்னர் பொறியாளர்கள் பல மணி நேரம் போராடி இந்தத் கோளாறை சரிசெய்தனர். தற்போது சிஸ்டம் சரி செய்யப்பட்டுள்ள போதிலும், தேங்கியுள்ள விமானப் பணிகளைச் சீரமைக்க கூடுதல் நேரமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்ப முடக்கத்தால் லண்டனின் ஹீத்ரோ, காட்விக், ஸ்டான்ஸ்டெட், சிட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பிரிட்டன் விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இது தவிர மான்செஸ்டர், பர்மிங்காம், எடின்பர்க் மற்றும் அயர்லாந்தின் டப்ளினிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரோ, நேற்று மாலை அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
'ஃப்ளைட்-ராடார்24' வலைத்தளத்தின்படி, 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ரேயான்ஏர் நிறுவனம் தனது 50-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததுடன், 65,000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததுடன், விமானங்களும் அதன் ஊழியர்களும் வெவ்வேறு இடங்களில் சிக்கியுள்ளதால் இந்த பாதிப்பு அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என எச்சரித்துள்ளது.
ஈஸிஜெட் நிறுவனமும் ஐரோப்பா முழுவதும் இதன் தாக்கம் பரவியுள்ளதாகக் கூறியுள்ளது.
"விமான நிலையத்தைக் கடப்பது அல்காட்ராஸ் சிறையிலிருந்து தப்பிப்பது போல இருந்தது; இது ஒரு மோசமான பகற்கனவு" என்று காட்விக் விமான நிலையத்தில் 3 மணி நேரம் காத்திருந்து விமானம் ரத்து செய்யப்பட்ட ஜோசி டோனோகு என்ற பயணி வேதனையுடன் தெரிவித்தார்.
பல பயணிகள் விமானங்களுக்குள்ளேயே 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வைக்கப்பட்டனர்.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹெய்டி அலெக்சாண்டர் இது குறித்து தெரிவிக்கையில், சிஸ்டம் சரிசெய்யப்பட்டதை வரவேற்றார்.
எனினும், விமான சேவைகள் முழுமையாக சீரடைய நேரம் ஆகும் என்பதால், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைச் சரிபார்த்துவிட்டு புறப்படுமாறு அறிவுறித்தினார்.
மேலும், இத்தகைய தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க NATS அமைப்பிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.