வீடியோ  
உலகம்

மாடியில் இருந்து விழுந்த சிறுவன்.. சூப்பர் மேனாக வந்து காப்பாற்றிய இளைஞர் - வீடியோ வைரல்

எல்லாம் சில நொடிகளில் நடந்துவிட்டது. என் உயிரைப் பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை.

எகிப்தில் மாடியில் இருந்து விழுந்த சிறுவனை கேட்ச் பிடித்து இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

எகிப்தின் கிசாவில் இரண்டாம் மாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்த ஐந்து வயது சிறுவனை, ஒரு இளைஞர் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

நடந்தது இதுதான்

அகமது ராகப் என்ற இளைஞர் கிசாவின் அர் எல் லேவா பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, ​​அருகிலுள்ள ஒரு கட்டிடத்திலிருந்து அலறல் சத்தங்களைக் கேட்டு, அவர் அந்தத் திசையில் பார்த்தார்.

சில நொடிகளில், இரண்டாம் மாடி பால்கனியிலிருந்து ஒரு சிறுவன் சறுக்கி விழுவதை அவர் கவனித்தார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகப் அங்கு ஓடினார்.

சிறுவன் கீழே விழுந்தபோது, ​​முதலில் ஒரு துணி காயப்போடும் கயிற்றின் மீது விழுந்தான்.

இது சிறுவனின் வீழ்ச்சியை சற்று மெதுவாக்கியது, அவனைப் பிடிக்க ராகபிற்குச் சிறிது அவகாசம் கொடுத்தது.

சிறுவன் தரையில் விழுவதற்குள், ராகப் சாமர்த்தியமாக அவனைத் தன் கைகளில் பிடித்துக்கொண்டார்.

ராகப்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ராகப், "எல்லாம் சில நொடிகளில் நடந்துவிட்டது. என் உயிரைப் பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. குழந்தை ஆபத்தில் இருப்பதைப் பார்த்ததும் என் உடல் தானாகவே செயல்பட்டது" என்றார்.

சிறுவன் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த பின்னரே, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்ததாக அவர் கூறினார்.

அந்த நேரத்தில் தன்னால் எப்படி அவ்வளவு விரைவாகச் செயல்பட்டு சிறுவனைப் பிடிக்க முடிந்தது என்று தெரியவில்லை என்றும், மீண்டும் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதேபோல் செய்திருப்பேனா என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT