விசித்திர விலங்கு வீடியோ  
உலகம்

மனிதர்களை தாக்கும் விசித்திர விலங்கு.. விழிபிதுங்கும் அமெரிக்கர்கள் - வீடியோ வைரல்

விலங்கு மீண்டும் வாகனத்தின் அடியில் புகுந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைகிறது.

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு மர்ம விலங்கு மக்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வரை மட்டும் இத்தகைய மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் லெபனான் நகரின் சென்டெர்ரா பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக்-க்கு அருகில் ஓட்டுநரை அந்த விசித்திர விலங்கு பாய்ந்து தாக்கும் வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியாகியுள்ளது.

வீடியோ

வீடியோ காட்சிகளின்படி, புல்வெளியில் இருந்து அதிவேகமாக ஓடிவரும் அந்த விலங்கு, நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு அடியில் புகுந்து, அதிலிருந்து இறங்கிய ஓட்டுநரின் மீது திடீரெனப் பாய்கிறது.

அந்த நபர் தன் கையில் இருந்த பையைக் கொண்டு விலங்கை விரட்டவும் முயல்கிறார். ஆனால், பையைப் பிடுங்கி எறியும் அந்த விலங்கு, மீண்டும் பாய்ந்து அவரது கால்களை கவ்விப் பிடிக்கிறது.

கடுமையாகப் போராடி அந்த நபர் விலங்கின் பிடியை உதறித் தள்ளுகிறார். மற்றொரு நபர் உதவிக்கு ஓடிவரும் வேளையில், அந்த விலங்கு மீண்டும் வாகனத்தின் அடியில் புகுந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைகிறது.

என்ன விலங்கு?

தாக்குதல் நடத்தியது எந்த வகையான விலங்கு என்பதை போலிசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், சாட்சியங்களின் கூற்றுப்படி, அது வீட்டுப் பூனையின் அளவில் இருக்கும் சாம்பல் நிற நரி அல்லது Weasel எனும் மர நாய் குடும்பத்தைச் சேர்ந்த மாமிசஉண்ணி விலங்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிலிப் ராபர்ட்ஸ் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், "ஒரு வன விலங்கு மனிதர்களைத் தேடி வந்து தாக்குவது இயல்பானதல்ல. அந்த விலங்கு ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. அது மக்களை கடிப்பது கவலையளிக்கிறது" என தெரிவித்தார்.

வனப்பகுதிகள் மற்றும் புதர்கள் நிறைந்த இடங்களுக்கு அருகில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விசித்திர விலங்குகளை கண்டால் உடனடியாக போலிசாரை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ரேபிஸ் தொற்று

ரேபிஸ் தொற்றானது, விலங்கின் கடி, கீறல் அல்லது உமிழ்நீர் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடும்.

இதனால் காய்ச்சல், வாந்தி, மன பிரமை மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படும். ரேபிஸ் உயிருக்கு ஆபத்தானது என்பதால், கடியுண்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

SCROLL FOR NEXT