உலகம்

"டிரம்ப்பிடம் இருப்பதற்கு பதில் எங்களிடம் பிடிபடுவதே மேல்" - அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் பதில்

முஸ்லிம்களாகவும், நாகரிகமான ஈரானியர்களாகவும், காவலில் உள்ள கைதிகளை எப்படி கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்துவது என்று எங்களுக்கு தெரியும்.

ஈரானில் அமெரிக்காவின் இரண்டு அதிநவீன எப்-15 போர் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. அந்த விமானங்களை இயக்கிய 2 விமானிகளும் ஈரான் எல்லைக்குள் குதித்துவிட்டனர். அதில் ஒருவரை இஸ்ரேல் பாதுகாப்பு படை மீட்ட நிலையில், மற்றொரு வீரர் ஈரானுக்குள் சிக்கிக் கொண்டார்.

அமெரிக்க விமானியை உயிருடன் பிடித்து ஒப்படைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று ஈரான் ராணுவம் அறிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அமெரிக்க விமானியின் தாயார் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு எப்-15 போர் விமானங்களை இயக்கிய விமானிகளுக்காக பிரார்த்தியுங்கள். அதில் எனது மகனும் ஒருவர்.

இதுவரை எனது மகனிடம் இருந்தோ, ராணுவத்திடமிருந்தோ எனக்கு எந்த தகவலும் இல்லை. என் இதயம் கவலையால் கனத்துப்போயுள்ளது. அனைத்து விமானிகளுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவிற்கு பதிலளித்து பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதகரம் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானில் காவலில் இருப்பதை விட, டிரம்ப்புடன் இருக்கும்போது உங்கள் மகன்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்க மீட்புக் குழுக்களால் அவர் கண்டுபிடிக்கப்படுவதை விட, ஈரானால் பிடிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

முஸ்லிம்களாகவும், நாகரிகமான ஈரானியர்களாகவும், காவலில் உள்ள கைதிகளை எப்படி கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்துவது என்று எங்களுக்கு தெரியும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.