ஐரோப்பாவில் தெற்கு அயர்லாந்து தனி நாடாகவும், வடக்கு அயர்லாந்து பிரிட்டன் நாட்டின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.
பிரிட்டன் வசம் உள்ள வடக்கு அயர்லாந்தின் தலைநகரம் பெல்பாஸ்ட்.
கடந்த ஜூன் 8 இரவு பெல்பாஸ்ட்டின் கின்னார்ட் அவென்யூ பகுதியில் சூடான் நாட்டைச் சேர்ந்த ஹாதி அலோதித் என்ற அகதி, ஸ்டீபன் ஓகில்வி என்ற மாற்றுத்திறனாளி நபரை சமையலறை கத்தியால் கொடூரமாக தாக்கினார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஓகில்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது இடது கண்ணின் பார்வையை முற்றிலும் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குடியேறிகளுக்கு எதிராக பெல்பாஸ்ட் நகரிலும் பிரிட்டனின் பிற பகுதிகளிலும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை அறிவித்தன.
இந்த போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக மாறியுள்ளது. பெல்பாஸ்ட் மற்றும் பிரிட்டனின் பல நகரங்களில் வலதுசாரி கும்பல் வெளிநாட்டினரின் கடைகள், வாகனங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து பேருந்துகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தி சேதப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக பெல்பாஸ்ட் நகரம் வன்முறைக் காடாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குடியேறிகளின் வீடுகளுக்குள் புகுந்து ஜன்னல்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
சூப்பர் மார்க்கெட், அரசுப் பேருந்து மற்றும் பல கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கடுமையாக முயன்று வருகின்றனர்.
வன்முறை பெல்பாஸ்ட்டை தாண்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ, எடின்பர்க் மற்றும் லண்டனின் நாடாளுமன்றச் சதுக்கம் வரை பரவியுள்ளது.
"தொடர்ச்சியாகவும் பலமாகவும் போராடினால் மட்டுமே மாற்றம் வரும்" என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த வன்முறைக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் மிஷெல் ஓ நீல் ஆகியோர் மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.