உலகம்

ஷேக் ஹசீனா சொந்த ஊரில் மீண்டும் வன்முறை: போலீஸ் நிலையம்-எம்.பி.யின் வீட்டுக்கு தீ வைப்பு

வன்முறையை தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

மாணவர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், வங்காளதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதில் கூறப்பட்ட குற்றச்சாட்டு​களுக்கு ஷேக் ஹசீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதற்கிடையே அடுத்த மாதம் வங்காளதேசத்திற்கு திரும்புவேன் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து புதிய பாஸ்போர்ட்டுக்காக வங்காளதேச அரசிடம் விண்ணப்பித்தார். ஆனால் குற்றவாளிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும் என்றும் வங்காளசேதம் அரசு தெரிவித்தது.

இதனால் கடந்த 11-ந் தேதி நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் ஷேக் ஹசீனாவின் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் ஷேக் ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்ச் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. கோபால்கஞ்சின் துங்கிபாரா மாவட்டத்தில் அவாமி லீக் ஆதரவாளர்கள் என்று சிலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை தொடங்கியது.

போலீஸ் நிலையத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சிலரை விடுவித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தனர்.

அதேபோல் பரித்பூர் மாவட்டத்தின் பங்கோ பகுதியில் போலீசாருக்கும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆளும் வங்காளசேத தேசியவாத கட்சியின் உள்ளூர் விவசாயிகள் பிரிவின் தலைவரான ராஜு மொல்லா கொல்லப்பட்டார்.

மேலும், அக்கட்சியின் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. கோபால்கஞ்சில் உள்ள ஆளும் கட்சி எம்.பி ஜிலானியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து​​ எம்.பி.யின் குடும்பத்தினர் தப்பி சென்றனர்.

எம்.பி வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வன்முறையை தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே தலைநகர் டாக்காவில் நள்ளிரவில் 4 பஸ்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசினர்.

SCROLL FOR NEXT