மோடி, ஹசீனா, தாரிக்  
உலகம்

பிரதமர் மோடி - தாரிக் ரஹ்மான் சந்திப்புக்கு குறுக்கே நிற்கும் ஷேக் ஹசீனா.. வங்கதேசம் போட்ட கறார் கண்டிஷன்

தாரிக் ரஹ்மான் பயணத்திற்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும்

வங்கதேசத்தில் கடந்த 2024 இல் மாணவர்கள் போராட்டத்தால் அவாமி லீக் ஆட்சி கவிழ்ப்புக்கு பின் அதன் தலைவரும் அப்போதைய பிரதமருமான ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார்.

வங்கதேசம்

இதனிடையே வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் நடந்த இடைக்கால ஆட்சி கடந்த பிப்ரவரியில் நடந்த பொது தேர்தலுடன் முடிவுக்கு வந்தது. அந்த தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமர் ஆனார்.

வங்கதேச மாணவர் போராட்டத்தின்போது அழிவுகரமான தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவருக்கு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த டிசம்பரில் மரண தண்டனை விதித்தது.

இந்த சூழலில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி இந்தியாவை வங்கதேச அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே 2 ஆண்டுகள் பின்னர் முதல் முறையாக இந்த மாதம், ஷேக் ஹசீனா ஆன்லைனில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தனக்கு என்ன நேர்ந்தாலும் தான் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வங்கதேசம் செல்வதாக தெரிவித்திருந்தார்.

அழைப்பு

வங்கதேச பிரதமராக பொறுப்பேற்றபோதே தாரிக் ரஹ்மான் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் அண்டை நாடு ஆதலால், அவரின் இந்தியா வருகை அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.

சட்டவிரோத குடியேற்றம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொய்வை கண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால் அவர் இதுநாள் வரை இந்தியா வருகை தரவில்லை. இந்த வாரத்தில் திட்டமிடப்பட்டிருந்த தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அவர் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தனது இந்திய வருகைக்கு தாரிக் ரஹ்மான் அரசு நிபந்தனை விதித்துள்ளது.

நிபந்தனை

அவரின் இந்திய பயண திட்டத்திற்கு அங்குள்ள அரசியல் காட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த நிபந்தனைகளை தாரிக் அரசு விதித்துள்ளது.

நேற்று டாக்காவில் பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல் கரீம், ஷேக் ஹசீனா மற்றும் நாடு தப்பிய இதர குற்றவாளிகளை நாடுகடத்துவதில் இந்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலம் பிரதமர் தாரிக் ரஹ்மான் பயணத்திற்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதித்ததற்கு இந்திய அரசை வங்கதேச அரசு கடுமையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.