ஷேக் ஹசீனா  
உலகம்

டிசம்பரில் இதுதான் நடக்கும், ஷேக் ஹசீனா நாடு திரும்புவது பற்றி வங்கதேச அமைச்சர் கருத்து

ஹசீனா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் விரும்புவதாக கோபிர் கூறினார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அல்ல, குளிர்காலம் மட்டுமே டிசம்பரில் நாட்டிற்கு திரும்பும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கோபிர் கிண்டலாக குறிப்பிட்டார்.

நாடு கடத்தும் ஒப்பந்தத்தின் மூலமாக மட்டுமே ஷேக் ஹசீனாவால் வங்கதேசத்திற்கு திரும்ப முடியும் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"சில்ஹெட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் ஏற்கனவே கூறியுள்ளேன், ஷேக் ஹசீனா டிசம்பரில் வரமாட்டார்... டிசம்பரில் யாரும் வரமாட்டார்கள்; குளிர்காலம் மட்டுமே வரும்," என்று கோபிர் கூறியதாக யுனைடெட் நியூஸ் ஆஃப் பங்களாதேஷ் (UNB) செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே வழி:

வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஷேக் ஹசீனாவை முறைப்படியான ஒப்படைப்பின் மூலமாகவோ அல்லது கடுமையான கண்காணிப்பின் கீழோ வங்கதேசத்திற்கு திரும்ப அழைத்து வர வேண்டும் என்றும், அதுவே அவர் நாட்டிற்கு திரும்புவதற்கான "ஒரே வழி" என்றும் அவர் கூறினார்.

தற்போதுள்ள ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஹசீனா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்களை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் விரும்புவதாக கோபிர் கூறினார். வங்கதேசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியதாக யு.என்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வரும் ஹசீனா, பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றதை நினைவுகூரும் வெற்றி தினமான டிசம்பர் 16-ஆம் தேதியன்று, அரசு விமானம் மூலம் டாக்கா திரும்ப விரும்புவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT