உலகம்

ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: வங்கதேசம் விடுத்த கோரிக்கைக்கு இந்தியா பதில்

வங்கதேசத்தில் 2024-இல் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிற்கு ராணுவம் அழைத்து வரவில்லையென்றும், அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 2024-இல் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இதையடுத்து ஹசீனாவை திரும்பவும் வங்கதேசத்திற்கு அனுப்புமாறு, அந்நாட்டு அரசாங்கம் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஹசீனாவை நாடு கடத்த கோரி வங்கதேசம் விடுத்த கோரிக்கைக்கு இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி பதிலளித்துள்ளார்.

வங்காள விரிகுடா மாநாடு

வங்கதேச தலைநகர் டாக்காவில் 2026ஆம் ஆண்டிற்கான வங்காள விரிகுடா மாநாட்டை வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன.

ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்

அப்போது இந்தியாவில் வசித்து வரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, வங்கதேசத்திற்கு நாடு கடத்தும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த கோரிக்கைக்கு பதிலளித்த தினேஷ் திரிவேதி, “நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது, நீதிமன்றங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் காலக்கெடு எதுவும் கூற இயலாது.

ஹசீனா இந்தியாவிற்கு வரும் போது பிரதமராக இருந்தார். அப்போது எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இருந்தது.

வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது ஒரு அண்டை நாடாக எங்கள் கடமையாக இருந்தது. ஏனென்றால் சில சமயங்களில் நீங்கள் தயாராக இல்லாத சூழ்நிலைகள் உருவாகும்.

எங்களுக்கு என்ன வழி இருந்தது? இல்லை, நாங்கள் இதை ஏற்க மாட்டோம், தரையிறங்க அனுமதி தரமாட்டோம் என்று சொல்லியிருந்தால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று எனக்கே தெரியவில்லை.

இந்திய அதிகாரிகள் அந்த சூழ்நிலைக்குத் தயாராகாமல் இருந்தார்கள்.

அப்போது வங்கதேசத்தில் நிலவிய துயரமான சூழ்நிலைகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது. ஹசீனாவை இந்திய விமானப்படையோ அல்லது ராணுவமோ இந்தியாவிற்கு அழைத்து வரவில்லை.

நாடு கடத்துவதற்கு இந்திய அரசுக்கு ஒரு செயல்முறை உள்ளது. அந்த செயல்முறை சட்டப்பூர்வமானது மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்டது.

எனவே அந்த செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அவர் விவகாரத்தில் நீதிமன்றங்கள் ஈடுபட்டுள்ளதால், யாராலும் வங்கதேசத்திற்கு நாடு கடத்துவது குறித்து ஒரு காலக்கெடுவை வழங்க முடியாது.

வங்காளதேசத்துடனான இந்தியாவின் உறவானது டாக்காவின் பிற நாடுகளுடனான உறவுகளை போன்று கிடையாது. இரு நாடுகளுக்கும் தத்தமது தேசிய நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.

இருதரப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வங்கதேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையே தொடர்ச்சியான உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை அவசியமாக உள்ளது.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை செயல்முறை மெதுவாக இருக்கலாம், ஆனால் அது நின்றுவிடவில்லை.

நான் உங்களுக்கு உறுதிய ளிக்கிறேன், இந்த செயல்முறைக்கு எந்த தடையும் இல்லை. இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று திரிவேதி கூறினார்.

SCROLL FOR NEXT