ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரின் தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் வங்கதேசம் தனது வரலாற்றில் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் பதவியை அடைவது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்பு 1986-87 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் ஹுமாயுன் ரஷீத் சவுத்ரி இப்பதவியை வகித்தார். ஐ.நா.வின் தலைமைப் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த 81-வது அமர்வுக்கான தலைவர் பதவி ஆசிய-பசிபிக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 2 ஜூன் அன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில், ரஹ்மான் தனது போட்டியாளரான சைப்ரஸ் நாட்டின் சிறப்புத் தூதுவர் ஆண்ட்ரியாஸ் எஸ். கக்கூரிஸை 8 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப்பெற்றார்.
ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் மொத்தம் 190 நாடுகள் இந்தத் தேர்தலில் வாக்களித்தன. இதில் ரஹ்மான் 99 வாக்குகளகும், கக்கூரிஸ் 91 வாக்குகளும் பெற்றனர். செல்லாத வாக்குகளோ அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணிப்பவர்களோ இல்லை.
ரஹ்மான் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி, ஓராண்டு காலத்திற்கு இப்பதவியில் நீடிப்பார் என ஐ.நா. தெரிவித்துள்ளது.