பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகில் உள்ள ஏராளமான நாடுகளுக்கு நேரடி விமான சேவை உள்ளது.
பெங்களூரு - சுவிட்சர்லாந்திற்கு நேரடியான விமான சேவை இல்லை என்றும் நேரடி விமான சேவை வேண்டும் என்று பயணிகள் கோரிக்கைளை முன் வைத்தனர்.
பயணிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனம் பெங்களூரு - சுவிட்சர்லாந்து இடையே அக்டோபர் முதல் நேரடி விமான சேவை தொடங்கும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது பெங்களூரிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல விரும்பும் பயணிகள் துபாய், கத்தார் அல்லது ஜெர்மனி வழியாக விமானம் மாறி தான் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. இதனால் பயணிகள் அனைவரும் பல சிரமங்களையும் சந்தித்து வந்தனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம், பயணிகள் எங்கும் இறங்கி மாறாமல் பெங்களூருவிலிருந்து 9 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்தை சென்றடைய முடியும்.
அக்டோபர் 25 முதல் சூரிச் நகரிலும் அக்டோபர் 27 முதல் பெங்களூருவிலும் இந்த சேவை தொடங்குகிறது. வாரத்திற்கு 5 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த வழித்தடத்தில் சொகுசான பயணத்திற்காக அதிநவீன 'ஏர்பஸ் 330-300' ரக விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் ஃபர்ஸ்ட் கிளாஸ், பிசினஸ் மற்றும் எகனாமி என மூன்று விதமான வகுப்புகள் உள்ளன.
இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டன.
இதன்மூலம் பெங்களூரு சுவிட்சர்லாந்து இடையேயான தொழில் வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.