உலகம்

சிறுமியை கொன்று உடலை வாகனத்தின் முன் வைத்து ஊர்வலம் சென்ற பாகிஸ்தான் ராணுவம்

8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

பாகிஸ்தானின் தென்–மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தனி நாடு கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இந்தநிலையில் பலுசிஸ்தானில் ஒரு அப்பாவி சிறுமியை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு கொன்று உள்ளனர். பின்னர் அந்த சிறுமியின் உடலை ஒரு ராணுவ கவச வாகனத்தின் முன்புறத்தில் வைத்தபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

போராட்டம் நடத்தும் மக்களை அச்சுறுத்தும் விதமாக இந்த அட்டூழியத்தை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக போராட்ட குழுவினர் அறிவித்த பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள கசினா பண்டா போலீஸ் சோதனைச்சாவடி மீது ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி உள்பட 7 போலீசார் பலியானார்கள்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.