உலகம்

காணாமல் போனோர் தினம்.. பாகிஸ்தான் ராணுவத்தின் கோர முகம் - பலுசிஸ்தான் மக்களின் தீராத் துயர்

நூற்றுக்கணக்கானோர் போலி என்கவுண்டர்கள் மூலமாக கொல்லப்படுகின்றனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கில் ஆப்கானிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இங்கு கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

பலுசிஸ்தான் பிரிவினைவாதம்

பாகிஸ்தானின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களை போலல்லாது பலுசிஸ்தான் மக்கள் இன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மொழிவழக்கிலும் தனித்த அடையாளம் கொண்டவர்கள் ஆவர்.

எனவே பலுசிஸ்தானை தனிநாடாக அறிவிக்க கோரும் பலூச் விடுதலை ராணுவம் போன்ற பிரிவினைவாத ஆயுத குழுக்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.

ராணுவ மற்றும் காவல் மையங்களை தாக்குவது, பயணிகள் ரயிலை கடத்துவது, பொது இடத்தில் குண்டுவெடிப்பு என பல்வேறு நாசவேலைகளில் அங்குள்ள ஆயுதக்குழுக்கள் ஈடுபடுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இவர்களை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் கடுமையான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் பலுசிஸ்தானில் வாழும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ அடக்குமுறை

கிளர்ச்சியாளர்கள் என்று குற்றம்சாட்டி முன்னறிவிப்பின்றி அங்குள்ள பலரை ராணுவம் கைது செய்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கிறது. ஆனால் அவர்கள் திரும்பி வருவதே இல்லை என அங்கு பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் பலுசிஸ்தான் அங்கு மிகவும் பிந்தங்கிய மாகாணமாக உள்ளது. இதனால் அங்கு நடப்பது குறித்து வெளியுலகிற்கு அதிகம் தெரியவருவதில்லை.

காணாமல் போனோர் தினம்

எனவே காணாமல் போனோருக்கு நீதிகேட்டும், உலகின் கவனத்தை ஈர்க்கவும் நேற்று (ஜூன் 8) அங்கு 'பலூச் காணாமல் போனோர் தினம்' அனுசரிக்கப்பட்டது.

பலூச் மாணவர் குழுவால் கடந்த 2017இல் இத்தினம் உருவாக்கப்பட்டபோதிருந்த நிலைமையை விட தற்போது அங்கு அடக்குமுறை பண்மடங்கு அதிகரித்துள்ளது.

மனித உரிமை

பாகிஸ்தான் ராணுவத்தின் தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் மற்றும் போலி என்கவுண்டர் கொலைகளுக்கு எதிராக இந்த தினத்தில் மனித உரிமை குழுக்கள், மாணவர் இயக்கங்கள் கூடி நேற்று தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தன.

ராணுவத்தால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட தங்கள் உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதே தெரியாமல் தவிக்கும் குடும்பங்களும் இத்தினத்தில் பதாகைகளை ஏந்தி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தன.

அறிக்கை

நேற்று, பலூச் மாணவர் குழு வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுபவர்கள் பல மாதங்களாக ராணுவத்தின் ரகசியச் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

அவர்கள் சிலர் மோசமான நிலையில் வீடு திரும்பினாலும், நூற்றுக்கணக்கானோர் போலி என்கவுண்டர்கள் மூலமாக கொல்லப்படுகின்றனர். அதில் சிலரின் உடல்கள் குடும்பத்தினருக்கு கிடைக்கின்றன, பலரது உடல்கள் கூட வீடு வந்து சேர்வதில்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.