தென் ஆபிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த 2 துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
தென் ஆபிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அந்த பாரில் அந்நாட்டின் நேரப்படி சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் வாடிக்கையாளர் கூடியிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 8 பேர் உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அங்கிருந்து செல்வதற்கு முன் சிலரின் பைகளில் சோதனையிட்டு செல்போன்களை எடுத்துக்கொண்டு வெளியே நின்ற 2 வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இது கும்பல் மோதளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட 17 பேரில் 13 பேர் ஆண்கள் என்றும் 4 பேர் பெண்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து இன்று காலை தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு வெளியில் உள்ள புறநகர் பகுதியில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமுற்றனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 22 அன்று தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள குவாமகுதா நகரில், வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்காவில் சட்டப்படியும், சட்டவிரோதமாகவும் பலரும் துப்பாக்கிகள் வைத்திருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் கும்பல்கள் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. இதனால் அப்பாவி மக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
62 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் ஆப்பிரிக்காவில் கொலை குற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 60 பேர் வரை கொல்லப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச்சில் ராணுவமும் காவல்துறையும் இணைந்து ஜோகன்னஸ்பர்க்கில் செயல்படும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கும்பல் வன்முறை நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் என அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமாபோசா விவரித்துள்ளார்.