கென்யாவில் நகுரு கவுண்டியில் உள்ள கில்கில் பகுதியில் உதுமிஷி பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் மாணவிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
ஏற்கனவே, கென்யாவில் கடந்த 2001ம் ஆண்டில், மச்சாகோஸ் கவுண்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 67 மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.