ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
இந்த ஏரி 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ. வரை அகலமும் கொண்டதாக உள்ளது.
ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு இன்று கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் 27 பேர் மாயமாகினர் எனவும், ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்தது. விசாரணையில் அந்தப் படகு 90 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நகாவா, இந்தப் படகு விபத்தை தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.