மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது, பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரியை பிரதமராக நியமித்துள்ளார்.
இதன் மூலம், 50 வயதான எஸ்ஸஹ்ரா, மொராக்கோவின் வரலாற்றில் பிரதமர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி மற்றும் அரபு உலகில் பிரதமராகும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நகர திட்டமிடல் அமைச்சரும் மராகேஷின் மேயருமான எஸ்ஸஹ்ராவிடம் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அரச அரண்மனை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 395 இடங்களில் 97 இடங்களைக் கைப்பற்றி, எஸ்ஸஹ்ராவின் முடியாட்சி ஆதரவு PAM கட்சி (வலதுசாரி) தேர்தலில் வெற்றி பெற்றது. PAM கட்சியானது, மன்னரின் நெருங்கிய நண்பரான புவாட் அலி அல் ஹிம்மாவால் 2008ல் நிறுவப்பட்டது.
கடந்த வாரத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு எஸ்ஸஹ்ரா பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்திற்குப் பிறகு தொலைக்காட்சியில் பேசிய அவர், தனது நியமனத்தை ஒரு வரலாற்று நிகழ்வு என்று விவரித்தார்.
"நமது நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கிறார். இது எனக்கு மட்டுமல்ல, அனைத்து மொராக்கோப் பெண்களுக்கும் பெருமைக்குரிய விஷயம்," என்று அவர் கூறினார்.
அரபு உலகில் பிரதமராகும் மூன்றாவது பெண் எஸ்ஸஹ்ரா ஆவார். அவருக்கு முன்பு, துனிசியாவின் நஸ்லா பூடன் அக்டோபர் 2021 முதல் ஆகஸ்ட் 2023 வரை பிரதமராகப் பணியாற்றினார். அவருக்குப் பிறகு, தற்போதைய துனிசியப் பிரதமர் சாரா ஸஃபரானி மார்ச் 2025ல் நியமிக்கப்பட்டார்.
1976ல் மராகேஷில் பிறந்த எஸ்ஸஹ்ரா, சட்டம் பயின்றார். அவர் பிரான்சிலுள்ள மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியில் பட்டயம் பெற்றுள்ளார்.
மேலும், அவர் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலோ-சாக்சன் வணிகச் சட்டத்தில் பட்டயமும் பெற்றுள்ளார்.
அவர் தனது இளமைக் காலத்திலேயே உள்ளாட்சித் துறையில் நுழைந்தார். 2009ல், அவர் மராகேஷின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மேயர் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
அவர் 2009 முதல் 2015 வரை அப்பதவியை வகித்தார், மேலும் 2021ல் மராகேஷின் மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2021 அக்டோபரில் தேசிய நிலத் திட்டமிடல், நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறக் கொள்கை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.