சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் நிறுவனத்தின்படி, ஆப் ஸ்டோர், ஐகிளவுட் மற்றும் ஆப்பிள் பே உள்ளிட்ட பல ஆப்பிள் சேவைகள் செவ்வாய் கிழமையன்று அமெரிக்கா முழுவதும் செயலிழந்தன.
பல பயனர்கள் தங்களின் ஆப்பிள் சாதனங்களில் இருந்து ஐகிளவுட்-இல் இருந்து எதிர்பாராதவிதமாக வெளியேற்றப்பட்டதாகவும், மீண்டும் உள்நுழைய முயன்றபோது சரிபார்ப்பு தோல்விகளை எதிர்கொண்டதாகவும் புகார் அளித்தனர்.
நிதி தகவல்களை திருடுவதையும் ஆப்பிள் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட ஒரு தீங்கிழைக்கும் இணைய தாக்குதலுக்கு, பி.பி.சி., ஹெச்.எஸ்.பி.சி. யு.ஏ.இ. வங்கி, ஏர் பிரான்ஸ் மற்றும் ஐகியா உள்ளிட்ட கிட்டத்தட்ட 200 முக்கிய இணையதளங்கள் இலக்காக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு இந்த சமீபத்திய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏ.எஃப்.பி.-இன் அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கைகளின்படி, பயனர்களின் ஆன்லைன் அனுபவங்களை தனிப்பயனாக்க முக்கிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தளமான ஆப்டிமைஸ்லி வழங்கும் கருவிகளில், ஹேக்கர்களால் சிதைக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் குறியீடு புகுத்தப்பட்டுள்ளது.
"இந்தப் பட்டியலில் உலகின் அதிகம் பார்வையிடப்பட்ட சில தளங்களான ஜூம், பிபிசி, சிஎன்என், சேல்ஸ்ஃபோர்ஸ், கிட்லேப், ஐகேயா, ஹெச்எஸ்பிசி (ஐக்கிய அரபு அமீரகம்), ஈக்விஃபாக்ஸ், ஏர் பிரான்ஸ்-கேஎல்எம், லெட்ஜர் மற்றும் பீகாக் ஆகியவை அடங்கும்.
தாக்குதல் நடத்தியவரின் (கிரிப்டோ) வாலெட்டுகளுக்கு, நவம்பர் 16 ஆம் தேதி, சுமார் ஒன்பது மணி நேரத்திற்குள் ஏறத்தாழ $7,040 வந்து சேர்ந்திருந்தது," என்று பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்காட் ஹெல்ம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் முன்னதாக, சில முக்கிய அமெரிக்க வங்கிகளில் உள்ள ஆன்லைன் கணக்குகளை அணுகுவதில் சிரமம் இருப்பதாக பல வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். டவுன்டிடெக்டரின்படி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சேஸ், யுஎஸ் பேங்க், வெல்ஸ் ஃபார்கோ மற்றும் ட்ரூயிஸ்ட் ஆகிய வங்கிகள் செயலிழந்துள்ளதாக அல்லது சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
"ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில பரிவர்த்தனைகள் நிறைவடைவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, ஆனால் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளையும் நிதிகளையும் தொடர்ந்து அணுக முடியும். இதை முடிந்தவரை விரைவாகச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்று சேஸ் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.