சர்வதேச தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வந்த அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்றுள்ளார்.
டிம் குக் சிஇஓ பதவியிலிருந்து விலகினாலும், அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை; மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்ற புதிய பொறுப்பை ஏற்கிறார்.
தன்னுடைய கடைசி நாளன்று ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
இந்தச் சிறந்த நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் தலைவராகச் செயல்பட்டது எனது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு ஊழியர்களாகிய நீங்கள்தான் காரணம். உங்களின் அர்ப்பணிப்பும் அன்பும் என்னை எப்போதும் வியக்க வைக்கிறது.
உங்களது உழைப்பு என் வாழ்நாளில் நான் கண்ட மிகச்சிறந்த குழுப் பணியாகும். 2011-இல் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸிடமிருந்து பொறுப்பேற்றதை நினைவு கூர்ந்த அவர், "உலகில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஜோப்ஸின் கனவை நாம் அனைவரும் இணைந்து நிஜமாக்கியுள்ளோம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் குறித்துப் பேசிய டிம் குக், "உலகை மாற்றக்கூடிய தயாரிப்புகளை எப்படி உருவாக்குவது என்பது ஜானுக்குத் தெரிந்த அளவு வேறு யாருக்கும் தெரியாது. அவரது தலைமையில் ஆப்பிள் அடுத்தக்கட்டத்திற்குச் செல்வதைக் காண ஆவலாக உள்ளேன்," என்று பாராட்டியுள்ளார்.
டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில், 'தலைமைச் செயல் அதிகாரியாக எனது கடைசி நாளில், ஆப்பிள் சமூகத்தினருக்கு எனது அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளை எனது பதவி மாறலாம், ஆனால் ஆப்பிள் சமூகத்தின் மீதான எனது அன்பு ஒருபோதும் மாறாது. நீங்கள் தொடர்ந்து எனக்கு உத்வேகம் அளித்து வந்தமைக்கு நன்றி.
என் நன்றியுணர்வு எல்லையற்றது; அடுத்தகட்டப் பயணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
2011-இல் டிம் குக் பொறுப்பேற்கும்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.33,21,752 கோடி இருந்தது.
தற்போது அவரது 15 ஆண்டுகால உழைப்பால் அது ரூ. 3,79,62,880 கோடி டாலருக்கும் மேல் உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இவரது காலத்தில்தான் ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், ஆப்பிள் சிலிகான் சிப்கள் போன்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.
புதிய சிஇஓ ஜான் டெர்னஸ், முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்தார்.
அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிம் குக்கின் இந்த உணர்ச்சிப்பூர்வமான எக்ஸ் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "ஆப்பிளில் ஒரு மகத்தான பணி வாழ்க்கைக்கு வாழ்த்துகள்!" என்று டிம் குக்கிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.