இலக்கியதுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன் கார்சனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு வினோத தொடர்பு உள்ளது.
2026 ஆம் ஆண்டு இலக்கியதுக்கான நோபல் பரிசு கனடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன் கார்சன் எழுதிய புத்தகங்களில் தன் சகோதரரின் நினைவுகளை குறித்து எழுதிய 'நாக்ஸ்' (Nox) புத்தகத்தை நோபல் குழு குறிப்பிட்டு பாராட்டியது.
நாக்ஸை ஒரு மறக்க முடியாத படைப்பு என்று வர்ணித்த நோபல் குழு, சமகால இலக்கியத்திற்காக அவர் உருவாக்கிய புதிய வடிவங்களுக்காகவும், அவரது தைரியம் மற்றும் படைப்பு பாணிக்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக கூறியுள்ளது.
கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்கை (László Krasznahorkai) வென்றார். 2024 ஆம் ஆண்டு இப்பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்-க்கு வழங்கப்பட்டது.
1950ல் கனடாவின் டொராண்டோவில் பிறந்தவர் ஆன் கார்சன். தற்போது அவருக்கு 76 வயது. கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் அவர் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆன் கார்சன் கிரேக்க மொழியிலும், செவ்வியல் இலக்கியத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், செவ்வியல் இலக்கியம், கிரியேட்டிவ் ரைட்டிங் போன்ற துறைகளில் அவரின் கல்விப் பணி இருந்தது.
பண்டைய கிரேக்க, ரோமன் இலக்கியங்களின் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை நவீன காலத்துக்குக் கொண்டு வருவது, கார்சனின் எழுத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
ஆன் கார்சன் எழுத்துக்களில் அவரின் கவிதைகளுக்கு தனி இடம் உண்டு. கட்டுரை மற்றும் மொழிபெயரிப்பிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.
'ஆட்டோபயோகிராஃபி ஆஃப் ரெட்' (Autobiography of Red), 'ரெட் டாக்' (Red Doc), மற்றும் 'இஃப் நாட், வின்டர்' (If Not, Winter) உள்ளிட்ட பல புகழ்பெற்ற படைப்புகளை எழுதியுள்ளார்.
Autobiography of Red புத்தகமும் கிரேக்க கவிஞர் ஸ்டீசிச்சோரஸின் துண்டுகளாகக் கிடைத்த பழைய கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கவிதை நாவலே ஆகும்.
தவிர முன்னரே கூறியதுபோல அவரின் படைப்புகளில் 'நாக்ஸ்' (Nox) புத்தகமும் முக்கியமான ஒன்று.
ஆன் கார்சனின் சகோதரர் மைக்கேல் கார்சன், கனடாவில் ஒரு போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பிறகு நாட்டை விட்டு வெளியேறினார்.
அவர் சுமார் 22 ஆண்டுகள் போலி பாஸ்போர்ட்களுடன் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பயணம் செய்தார்.
இந்தக் காலகட்டத்தில், அவர் தனது குடும்பத்தினரை ஆறு முறை மட்டுமே தொலைபேசியில் அழைத்தார்.
இறுதியாக, அவர் 2000 ஆம் ஆண்டில் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் இறந்தார். ஆன் கார்சன் இந்த நீண்ட பிரிவையும் தனது சகோதரரின் நினைவுகளையும் 'நாக்ஸ்' புத்தகத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
'நாக்ஸ்' என்பது ரோமானியப் புராணங்களில் இரவின் தேவதையைக் குறிக்கிறது. இந்தப் புத்தகத்தில் அவரது சகோதரரின் வாழ்க்கை நினைவுகள், புகைப்படங்கள், கவிதைகள், ஓவியங்கள் மற்றும் அவர் எழுதிய ஒரு கடிதம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் புத்தகத்தில், மைக்கேலால் இந்தியாவின் காஷ்மீரிலிருந்து எழுதப்பட்டதாக நம்பப்படும் ஒரு கடிதமும், காஷ்மீரில் அவர் தங்கியிருந்த ஹோட்டல்களின் கடிதத் தாள்கள், டேனிஷ் தபால்தலைகள் இந்த புத்தகத்தில் அடங்கியுள்ளன.
2000-ஆம் ஆண்டில், அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, மைக்கேல் தனது சகோதரி ஆனை அழைத்தார்.
அவரது குழந்தைப்பருவப் செல்லப்பெயரான 'பின்ஹெட்' என்று அழைத்து, தன்னைப் பார்ப்பதற்காகக் கோபன்ஹேகனுக்கு வருமாறு கேட்டார்.
இருப்பினும், பயணம் திட்டமிடப்பட்டிருந்ததற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தங்கை ஆன் கார்சனுக்கு அவர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது.
"ஒரு சகோதரன் ஒருபோதும் முடிவதில்லை. நான் அவனைத் தேடிக்கொண்டே இருப்பேன். அவன் ஒருபோதும் முடிவதில்லை" என்று அவர் தனது 'நாக்ஸ்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாக்ஸ், துக்கத்தைப் பற்றிய ஒரு புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களையும் அவர்களின் வரலாற்றையும் புரிந்துகொள்வது பற்றியது என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறினார்.