ஆண்டி பர்ன்ஹாம்
உலகம்

தொழிலாளர் கட்சி தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்

இங்கிலாந்து பிரதமராக இருந்த கெர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் பிரதமாக பதவி ஏற்க உள்ளார்.

10 ஆண்டுகளில் 7-வது பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்

மேக்கர்பீல்டு பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் 7-வது பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியது. அதை நிறைவேற்ற இதுதான் கடைசி வாய்ப்பு எனக் கூறப்படுகிறது.

நாங்கள் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை அளிக்கப் போகிறோம் என்று ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தனது முதல் உரையில் குறிப்பட்டார்.

மேலும், கெய்ர் ஸ்டார்மர் அமைத்த அடித்தளத்தின் மீது நின்று தலைமை தாங்க நான் தயாராக இருக்கிறேன். அவரது சேவைக்காக நன்றி தெரிவிக்கிறேன். பிரிட்டனை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல இருக்கிறேன்.

இந்த மாபெரும் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மற்றும் தேசத்திற்கும் நான் ஒரு தலைவராகத் திகழ்வேன்; மேலும், எங்கள் முன்னுரிமைகள் மற்றும் நாங்கள் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றில் இந்தக் கட்சி எவ்விதத் தயக்கமும் இன்றி 'லேபர்' (Labour) கொள்கை சார்ந்ததாகவே இருக்கும்.

உங்களுக்கு மிகவும் அவசியமான உள்ளாட்சி மற்றும் சமூகக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கும், உங்கள் வணிக வீதியை மேம்படுத்துவதற்கும், அப்பகுதிக்கு உயிரூட்டும் பப்கள் (pubs) மற்றும் கடைகள் போன்ற உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அத்துடன் மீண்டும் தொழில்மயமாக்கலை மேற்கொள்வதற்கும் உங்கள் பகுதிக்கு அதிக அதிகாரங்களை வழங்க நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

ஸ்டார்மர் ராஜினாமா

கடந்த மாதம் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு இவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை.

தற்போதைய பிரதமர் ஸ்டார்மர் ராஜினாமாவை முறையாக மன்னர் சார்லசிடம் வழங்கிய பிறகு, வருகிற திங்கட்கிழமை புதிய அரசு அமைக்க ஆண்டி பர்ன்ஹாமிற்கு அழைப்பு விடுப்பார். அதன்பின் புதிய பிரதமராக பதவி ஏற்பார்.