உலகம்

அமெரிக்கா அதிரடி தாக்குதல்: பதற்றத்தில் ஈரான்!

"அமெரிக்கா-ஈரான் நேரடியாக ராணுவ ரீதியாக மோதிக்கொள்வது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது."

ஈரானின் அத்துமீறிய தாக்குதலுக்குப் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலும், தற்காப்பு நடவடிக்கையாகவுமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. "அமெரிக்கா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினால், உடனடியாக பாரசீக வளைகுடாப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ராணுவம் தீவிரமாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் தெற்குப் பகுதிகளில் உள்ள பல்வேறு நகரங்களில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை, ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்க ராணுவத்தின் 'அபாச்சி' ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மத்திய கட்டளையகம் ஈரானில் உள்ள முக்கிய இலக்குகள் மீது இந்த அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானின் தெற்கு ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பண்டார் அப்பாஸ், சிரிக், ஜாஸ்க் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.

அமெரிக்கா-ஈரான் இடையேயான இந்த நேரடி ராணுவ மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.இந்தத் தாக்குதல் குறித்து 'ட்ரூத் சோசியல்' தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரான் எங்களது அதிநவீன அபாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த இரண்டு பைலட்டுகளும் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்க வேண்டியது கட்டாயமாகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய கிழக்கில் ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் நிலவி வந்த சூழலில், தற்போது அமெரிக்கா-ஈரான் நேரடியாக ராணுவ ரீதியாக மோதிக்கொள்வது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.