அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர், தான் ஐந்து வருடங்களாகச் செய்து வந்த ஆசிரியர் பணியை முழுமையாகத் துறந்துவிட்டு, பகுதி நேரமாகத் தொடங்கிய நாய் வாக்கிங் மற்றும் செல்லப்பிராணிகள் பராமரிப்புத் தொழிலை முழுநேரத் தொழிலாக மாற்றி, தற்போது மாதம் 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதித்துச் சாதனை படைத்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த கைட்லின் பல்லார்ட் என்ற இந்த பெண், தனது மாத பட்ஜெட்டைச் சமாளிப்பதற்காக ஆசிரியர் பணியுடன் சேர்த்து செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் பகுதி நேர வேலையைத் தொடங்கினார்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் உள்ளூர் செல்லப்பிராணி உரிமையாளர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
ஆசிரியர் பணியில் இருந்தபோதே பகுதி நேரமாக நாய் வாக்கிங் சென்றதன் மூலம் மட்டும் சுமார் 35,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33.5 லட்சம்) அவர் வருமானமாக ஈட்டியுள்ளார்.
இந்தத் தொழிலில் இருக்கும் பெரும் பொருளாதார வாய்ப்பையும், இதன் மூலம் கிடைக்கும் மனமகிழ்ச்சியையும் உணர்ந்த கைட்லின், தனது 5 ஆண்டுகால ஆசிரியர் பணியை விட்டு விலக முடிவெடுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆசிரியர் பணி தான் என் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். எனக்குப் பழக்கப்பட்ட ஒரு இடத்தை விட்டு வெளியேறுவது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும், அங்குள்ள வருமானத்தை விட இந்தத் தொழில் எனக்குப் பெரும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது"என்றார்.
தற்போது டெக்சாஸிலிருந்து மாசசூசெட்ஸ் மாகாணத்திற்குக் குடிபெயர்ந்துள்ள கைட்லின், அங்கு தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தியுள்ளார். தற்போது வாரத்திற்கு வெறும் 15 முதல் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் அவர், மாதத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சம் சம்பாதிக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக சுமார் ரூ. 6.3 லட்சம் சம்பாதித்து அசத்தியுள்ளார்.
வாரத்திற்கு 40 மணி நேரம் கூட உழைக்காமல் இந்த அளவிற்குக் கொட்டிக் கொடுக்கும் இந்த செல்லப்பிராணி பராமரிப்புத் தொழிலை, எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகக் கைட்லின் பல்லார்ட் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.