ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரசால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் 160-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் எபோலா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
எனவே, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து யாரும் வெளிநாடுகளுக்குச் செல்வதும் இல்லை, அங்கிருந்து வருபவர்களை மற்ற நாடுகளும் தீவிரமாக பரிசோதித்தே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனால், கடந்த 21 நாட்களுக்குள் இந்த நாடுகளுக்குச் சென்று வந்த வெளிநாட்டுப் பயணிகள் யாரும் அமெரிக்காவிற்குள் நேரடியாக நுழையக் கூடாது என அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து டெட்ராய்ட் நோக்கிப் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் காங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் விமான நிறுவனத்தின் தவறான சரிபார்ப்பு காரணமாக ஏற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே இதைக் கண்டறிந்த அமெரிக்க அதிகாரிகள், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பு கருதி அந்த விமானம் தங்கள் நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுத்துவிட்டனர். அமெரிக்கா அனுமதி மறுத்ததால், பக்கத்துக்கு நாடான கனடாவில் அந்த விமானம் தரையிறங்கியது.
விமானம் திசைதிருப்பப்பட்டதை அறிந்த விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் முகமூடிகளை அணிந்தனர்.
விமானம் கனடாவின் மாண்ட்ரியல் நகரில் பத்திரமாகத் தரையிறங்கியது. அந்தக் குறிப்பிட்ட காங்கோ பயணி தனியாகக் கீழே இறக்கப்பட்டு, கனடா சுகாதாரத் துறையின் குவாரன்டைன் அதிகாரிகளால் தீவிரமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அவருக்கு எபோலா வைரஸ் தாக்கம் ஏதுமில்லை என அறிந்த பின்பே, பயணிகள் நிம்மதி அடைந்தனர். பிறகு காங்கோ நாட்டைச் சேர்ந்தவரை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசோதனைக்குப் பிறகு பிரான்ஸ் விமானம் மீண்டும் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்குப் புறப்பட்டுச் சென்று பாதுகாப்பாகத் தரையிறங்கியது.