பிரிட்டனின் டெர்பிஷயர் காவல் துறையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், பல கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களை போலியாக உருவாக்க செயற்கை நுண்ணறிவு சிஸ்டம்களைப் பயன்படுத்தியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீதியை நிலைநாட்டத் தடையாக இருந்ததாக அவர் மீது தற்போது கிரிமினல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட நடவடிக்கையாக, அந்த அதிகாரி தனது தற்போதைய களப்பணிகளில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மறுஆய்வில் வழக்குகள்..
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, பிரிட்டனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் இந்த அதிகாரி கையாண்ட அனைத்து வழக்குகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இந்த போலி AI ஆதாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நீதிமன்றங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பு வழக்கறிஞர் குழுக்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீக்கம்..
இதேபோன்ற மற்றொரு சம்பவமாக, அமெரிக்காவின் மிசிசிப்பி மாநில கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு விசாரணையின் போது, இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களுக்கான ஆவணங்களைத் தயாரிக்க AI தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பியுள்ளனர்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி ஷாரியன் அய்காக், அதில் இருந்த சட்ட மேற்கோள்கள் மற்றும் முந்தைய வழக்கு விவரங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதைக் கண்டுபிடித்தார் என்பதும் தெரியவந்தது.
நீதிபதியின் கடுமையான எச்சரிக்கை..
முறையான சரிபார்ப்பு இல்லாமல், நீதிமன்ற விதிமுறைகளை மீறி போலி ஆவணங்களைத் தாக்கல் செய்த காரணத்திற்காக, வழக்கில் ஆஜரான நான்கு வழக்கறிஞர்களையும் தகுதி நீக்கம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவர்களுக்கு கடுமையான நிதி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் சட்டத்துறையில் சரிபார்க்கப்படாத AI பயன்பாடு அதிகரிப்பது மிகப்பெரிய ஆபத்து என்று நீதிபதி தனது உத்தரவில் எச்சரித்துள்ளார்.