உலகம்

தேர்தல் தோல்வி எதிரொலி?.. அமெரிக்க உதவி அட்டார்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் ஹர்மீத் கவுர்

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய முதல் மூத்த அதிகாரி இவரே ஆவார்.

அமெரிக்க குடிமை உரிமைகள் பிரிவு தலைவராகவும் உதவி அட்டார்னி ஜெனரலாகவும் இருந்த ஹர்மீத் கவுர் தில்லன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நவம்பர் 3 நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்ப் உடைய குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மை இழந்துள்ளது.

இந்நிலையில் டிரம்ப் அரசாங்கத்தில் குடிமை உரிமைகள் பிரிவின் தலைவராகவும் உதவி அட்டார்னி ஜெனரலாகவும் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் டிரம்பின் தீவிர ஆதரவாளருமான ஹர்மீத் கவுர் தில்லன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய முதல் மூத்த அதிகாரி இவரே ஆவார்.

ராஜினாமா

அட்டார்னி ஜெனரல் டாட் பிளான்ச் தனது எக்ஸ் பக்கத்தில் ஹர்மீத் தில்லனின் ராஜினாமாவை அறிவித்தார்.

அவரது பதிவில், "அவர் (ஹர்மீத்) ஒவ்வொரு அமெரிக்கரின் குடிமை உரிமைகளையும் பாதுகாத்தார். அவர் அச்சமின்றி பாரபட்சமின்றி சட்டத்தை அமல்படுத்தினார்.

எங்கள் துறையின் சார்பாக, அவரது சேவைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

விளக்கம்

இடைத்தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததாகவும், ஆனால் தேர்தல் முடியும் வரை அப்பதவியில் தொடருமாறு டிரம்பின் தலைமை ஊழியர் சூசி வைல்ஸ் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஹர்மீத் தில்லன் பாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

இருப்பினும் அமெரிக்காவில், இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு, ஜனாதிபதி தனது நிர்வாகத்தை மறுசீரமைக்க அனுமதிக்கும் வகையில் மூத்த அதிகாரிகள் பதவி விலகுவது வழக்கம்.

ஹர்மீத்

சண்டிகரில் பிறந்த ஹர்மீத், குழந்தையாக இருந்தபோது தனது குடும்பத்துடன் முதலில் பிரிட்டனுக்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தார்.

டிரம்ப் தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், ஹர்மீத் தனது 18 மாத பதவிக்காலத்தில் சில விஷயங்களில் மாறுபட்ட அணுகுமுறையை கையாண்டார்.

குறிப்பாக, குடியேறிகளின் விஷயத்தில் சீக்கிய லாரி ஓட்டுநர்களைக் குறிவைப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு சீக்கிய ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியபோது அவர் சமூக ஊடகங்களில், "சிலர் இந்த துயரங்களை சாதகமாக பயன்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சீக்கிய மற்றும் இந்திய வம்சாவளி ஓட்டுநர்களை குறிவைக்கிறார்கள்.

இங்கு பிறந்த அல்லது சட்டப்பூர்வமாக குடியேறிய இந்த ஓட்டுநர்கள், மிகவும் தேசபக்தியும் கடின உழைப்பும் கொண்டவர்கள்" என்று பதிவிட்டார்.

SCROLL FOR NEXT