இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம், அங்கு நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கூட்டம் கூடும் இடங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தலை வெளியிட்டது.
"கடந்த வாரம் சில இத்தாலிய நகரங்களில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கூட்டமான இடங்களையும் போராட்டங்கள் நடைபெறும் இடங்களையும் தவிர்க்குமாறும், இதுபோன்ற நிகழ்வுகள் குறித்த உள்ளூர் செய்திகளை பின்பற்றுமாறும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்," என இந்திய தூதரகம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் ஆர்ப்பாட்டங்களை சுரண்டும் குற்றவாளிகளிடம் இருந்து சட்ட அமலாக்க படைகள் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
"மீண்டும் ஒருமுறை, ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக கூட, மோதலை தூண்டுவதற்கும் குழப்பத்தை விதைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களை பயன்படுத்திக்கொள்ளும் குற்றவாளிகளின் வன்முறையை சட்ட அமலாக்க படையின் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அவர்கள் அனைவருக்கும் எனது முழுமையான ஆதரவையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில், குடிமக்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் தங்கள் நகரத்தை குண்டர் கும்பல்கள் பாழாக்குவதையும் தீக்கிரையாக்குவதையும் காணாமல் அச்சமின்றி வாழ உரிமையுள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை காப்பதற்காக அவர்கள் அங்கு இருந்தனர். நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம்," என்று மெலோனி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக கருத்து தெரிவத்த ஜார்ஜியா மெலோனி, வன்முறைச் செயல்களை கண்டிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இது குறித்த பதிவில், "சி.ஜி.ஐ.எல். அமைப்பால் அழைக்கப்பட்ட அணிதிரட்டலில் பங்கேற்றவர்கள் உட்பட, இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இதில் இடதுசாரி தலைவர்களும் பங்கேற்றனர். ஒருவர் எந்த கொள்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதில் பங்கேற்பது என்பது எந்தவொரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும் அடித்தளமாகும்," என்று அவர் கூறினார்.