உலகம்

அமெரிக்காவில் அதானி மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!.. எப்படி?

அதானிக்கு எதிராக இதே வழக்கை அமெரிக்காவில் மீண்டும் ஒருபோதும் தொடங்க முடியாது.

தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவருடைய மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து கிரிமினல் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

சூரிய மின்சக்தி ஒப்பந்த மோசடி வழக்கு:

கடந்த 2024இல், இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இந்த விவரங்களை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து கடன் திரட்டியதாகவும் கவுதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்டோர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அமெரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடர்ந்த இந்த வழக்கில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், அதே சமயம் மறுக்காமலும் கௌதம் அதானி 6 மில்லியன் டாலர் மற்றும் சாகர் அதானி 12 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு இந்த வழக்குகளுக்கு தங்களுடைய கூடுதல் நேரத்தை செலவிட அமெரிக்க நீதித்துறை விரும்பவில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குழு, அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளிடம் இந்த வழக்கை நடத்துவதற்கான அடிப்படை ஆதாரங்களோ அல்லது சட்ட எல்லையோ இல்லை என தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட அமெரிக்க நீதிமன்றம், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

'With Prejudice' என்ற சட்டப்பிரிவின் கீழ் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ஏற்கனவே உள்ள ஆதாரங்களை கொண்டு அதானிக்கு எதிராக இதே வழக்கை அமெரிக்காவில் மீண்டும் ஒருபோதும் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்பஜி வழக்கு:

இதற்கிடையே ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மீறி அதானிக்கு சொந்தமான நிறுவனம் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜி இறக்குமதி செய்ததாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான விசாரணைக்கு அதானி குழுமம் விரிவான ஒத்துழைப்பை வழங்கியதாலும் ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த முன்வந்ததாலும் அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT