அதானி  
உலகம்

அமெரிக்காவில் அதானி லஞ்ச வழக்கு தள்ளுபடி.. குற்றச்சாட்டுகள் என்ன? - வழக்கு கடந்து வந்த பாதை!

அமெரிக்காவில் அதானி குழுமம் 10 பில்லியன் முதலீடு செய்யப் போவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் இந்த வழக்கு கைவிடப்படுகிறது.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த லஞ்சம் மற்றும் மோசடி வழக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அவருடன், அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி முன்னாள் சி.இ.ஓ வினீத் ஜெயின் ஆகியோரும் நியூ யார்க் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க் பெடரல் நீதிமன்ற நீதிபதி நிக்கோலஸ் கரௌபிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்க அரசு எதிர்காலத்தில் இவர்கள் மீது மீண்டும் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முடியாத வகையில் 'Dismissed with prejudice' என்ற அம்சத்தின் கீழ் அவர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதானி ஊழல் குற்றச்சாட்டு

இந்திய அரசு அதிகாரிகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி குழுமத்தின் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க முதலீட்டை பெற்றதாக கெளதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடர்ந்த இந்த வழக்கில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், அதே சமயம் மறுக்காமலும் அதானி 6 மில்லியன் டாலர் மற்றும் சாகர் அதானி 12 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, மேலும் கூடுதல் நேரத்தை செலவிட அமெரிக்க நீதித்துறை விரும்பவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புரூக்ளினை தளமாக கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கரோபிஸிடம் இந்த வழக்கை உடனடியாக முறைப்படி தள்ளுபடி செய்யுமாறு அதானி வழக்கறிஞர்கள் வாதாடினர்.

அமெரிக்காவின் குற்றவியல் விதிப்படி, ஒரு வழக்கை திரும்பப் பெறுவதற்கு முன் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் நியாயமானவை தானா என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

எனவே அதானி மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியான தீர்ப்பு வழங்க அமெரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்

மேலும் இந்த வழக்கை கைவிடுவதற்கான தங்களது முடிவை நியாயப்படுத்தும்படியும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நியாயம்

இதற்கு ஜூலை 4 அன்று பதிலளித்த அமெரிக்க நீதித்துறை தரப்பு வழக்கறிஞர், முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தின் கடைசி நாட்களில், விசாரணை எந்தவொரு சாத்தியக்கூறுகளும் இல்லாத சூழலிலேயே அவசர அவசரமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இது இந்திய மின் கொள்முதல் ஒப்பந்தம் சார்ந்து இந்தியப் அதிகாரிகள் மீது பதியப்பட்ட வழக்கு என்பதால், இதில் அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவே தனது உள்நாட்டு சட்ட வழிமுறைகள் மூலம் இதனை கையாண்டு கொள்ள முடியும் என்றும் வாதாடினார்.

சந்தேகம்

இந்த வழக்கை கைவிடும் முடிவை அரசாங்கமே தன்னிச்சையாக எடுத்துள்ளது. அமெரிக்காவில் அதானி குழுமம் 10 பில்லியன் முதலீடு செய்யப் போவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் இந்த வழக்கு கைவிடப்படுகிறது என வெளியாகும் செய்திகள் உண்மையல்ல என்று வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

எனினும், அரசு வழக்கறிஞரின் இந்த விளக்கமே நீதிமன்றத்திற்குப் புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வராத ஏதேனும் ஒரு ரகசிய ஒப்பந்தம் அல்லது ஏற்பாடு இதன் பின்னணியில் இருக்கலாமோ என்று சந்தேகிப்பதாக கூறிய நீதிபதி, இறுதி முடிவை எடுக்கும் முன் அதானியின் நேரடி விளக்கம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அதானி தரப்பில் ஆஜராகும் சலிவன் & குரோம்வெல் நிறுவனத்தின் வழக்கறிஞர் ராபர்ட் ஜே. கியூப்ரா ஜூனியர், தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண பத்திரம்

வழக்கை கைவிடுவதற்குப் பிரதிபலனாக எந்தவொரு ரகசிய ஒப்பந்தமோ அல்லது வாக்குறுதியோ அளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பிராமண பத்திரம் சமர்ப்பிக்குமாறு அதானிக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 15க்குள் அதானி இந்த பிராமண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.

பிராமண பத்திரத்தில், இந்த வழக்கைக் கைவிடுவது தொடர்பாக யாரேனும், ஏதேனும் ஒரு வாக்குறுதியை உங்களிடம் கேட்டிருக்கிறார்களா, உங்களிடமிருந்து பெற்றிருக்கிறார்களா அல்லது அத்தகைய ஒப்பந்தத்திற்கு நீங்கள் உடன்பட்டிருக்கிறீர்களா?

இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதற்குப் பிரதிபலனாக ஏதேனும் ஒரு ஆதாயத்தை பரிமாறிக் கொள்வது குறித்த ஒப்பந்தம் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க நீதிமன்றம் கோரியது.

பதில்

நீதிபதி உத்தரவுப்படி அதானி தரப்பும் அப்படி எதுவும் பிரதிபலன்கள் செய்யப்படவில்லை என உறுதிமொழிப் பத்திரம் சமர்பித்ததை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில், அதானிக்கு எதிரான இறுதித் தீர்ப்பின் மூலம், அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திற்கு தொடர்ந்திருந்த சிவில் வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலும், அதே நேரம் மறுக்காமலும் அவர் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டார். இத்தீர்ப்பின்படி, அதானி 30 நாட்களுக்குள் SEC-க்கு 6 மில்லியன் டாலர் சிவில் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.

உண்மையை பற்றி அதானி

இந்தத் தீர்ப்பு குறித்து கௌதம் அதானி, "நீதித்துறை நடவடிக்கைகளை மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் வரவேற்கிறேன். இந்தச் சவாலான காலத்தில், உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை குலையவில்லை. எங்கள் மீதும், நாட்டின் நீதித் துறை மீதும் நம்பிக்கை இழக்காத அனைவருக்கும் என் நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.