உலகம்

இரவில் சூரிய வெளிச்சம் பாய்ச்சும் அமெரிக்காவின் விண்வெளித் திட்டம்: சுற்றுச்சூழலுக்கு பேராபத்தா?

இந்தக் கண்ணாடிகள் முடியை விட மிக மெல்லியதாகவும், மனிதர்களின் சாதாரண குளியலறை கண்ணாடிகளை விட அதிக திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

'ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், விண்வெளியில் பெரிய அளவிலான கண்ணாடிகளைப் பயன்படுத்தி இரவிலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் சூரிய ஒளியைப் பாய்ச்சும் புதிய தொழில்நுட்ப சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை தளமாகக் கொண்டு செயல்படும் 'ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், விண்வெளியில் பெரிய அளவிலான கண்ணாடிகளைப் பயன்படுத்தி இரவிலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் சூரிய ஒளியைப் பாய்ச்சும் புதிய தொழில்நுட்ப சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. அறிவியல் உலகத்தை வியப்பிலும் விவாதத்திலும் ஆழ்த்தியுள்ள இந்தத் திட்டம், மனிதகுலத்தின் ஆற்றல் தேவைகளை மாற்றிமைக்கும் என்று கூறப்பட்டாலும், கடுமையான சுற்றுச்சூழல் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

விண்வெளி கண்ணாடிகள்

பூமிக்கு மேலே குறைந்த உயர சுற்றுப்பாதையில் ராட்சத பிரதிபலிப்பு கண்ணாடிகளை நிலைநிறுத்தி, சூரிய ஒளியை ஈர்த்து அதனை இரவிலும் பூமியின் குறிப்பிட்ட இருண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் சூரிய மின் நிலையங்கள் தொடர்ச்சியாக மின் உற்பத்தி செய்வதை உறுதி செய்யவும், இரவ நேர மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் இந்தத் திட்டத்தின் முதல் பரிசோதனை செயற்கைக்கோளுக்கு கடந்த ஜூலை மாதம் அனுமதியும் அளித்துள்ளது.

இந்தக் கண்ணாடிகள் முடியை விட மிக மெல்லியதாகவும், மனிதர்களின் சாதாரண குளியலறை கண்ணாடிகளை விட அதிக திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டமாக பரிசோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், எதிர்வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலகின் ஆற்றல் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்றும், அவசரகால பேரிடர் காலங்களில் வெளிச்சம் வழங்குவது எளிதாகும் என்றும் இதன் மூலம் வாதிடுகின்றனர்.

இயற்கையான பகல் மற்றும் இரவு சுழற்சியில் செயற்கையாகத் தலையிடுவது பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கும் என்று வானியலாளர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தீவிர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரவில் வெளிச்சம் செயற்கையாகத் திணிக்கப்படுவதால் இரவு நேர விலங்குகளின் வாழ்விடங்களும், இயற்கையான தூக்க சுழற்சியும் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்வெளி கண்ணாடிகள் வானியல் ஆராய்ச்சிகளுக்கும் விண்வெளி கண்காணிப்புகளுக்கும் பெரிய தடையாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT