பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் நீதித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
2022ல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆகஸ்ட் 2023 முதல் அடியாலா சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி புஷ்ரா பீபியும் சிறையில் உள்ளார். இருவருக்கும் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்ரான் கான் இதை அரசியல் பழிவாங்கல் என தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் சிறையில் அவர் சித்திரவதையை அனுபவிப்பதாக அவரின் உறவினர்களும் அவருடைய பிடிஐ கட்சியை சேர்ந்தவர்களும் தொடந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
நீதிமன்ற தலையீட்டின் பின் அவரை கடும் கட்டுப்பாடுகள் உடனேயே குடும்பத்தினர் சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே அவரது உடல்நலன் மோசமடைந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சிறை நிர்வாகம் அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்று சில மணி நேரத்தில் மீண்டும் சிறையில் அடைத்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோருக்கு இம்ரான் கான் கடிதம் அனுப்பியுள்ளார்.
இம்ரான் கானின் வழக்கறிஞர் சல்மான் சப்தார், எக்ஸ் தளத்தில் இந்தக் கடிதத்தை வெளியிட்டார்.
அந்த கடிதத்தில், தான் முழுமையான தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு தனது வழக்கறிஞரை நான்கு முறை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகவும், தனது மனைவி புஷ்ரா பீபிக்கு அவரது வழக்கறிஞரிடம் பேச ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலை கையேட்டின்படி இது கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அனுமதியடன் தனது வழக்கறிஞர் வந்து தன்னைச் சந்திக்கும் வரை, தனது வலது கண் பார்வை 85 சதவீதம் குறைந்திருப்பதை தனது குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்க முடியவில்லை என்று இம்ரான் குறிப்பிட்டார்.
மறுபுறம், தனது மனைவி புஷ்ரா பீபியின் கண் பிரச்சினை மோசமடைந்துள்ளதாக இம்ரான் கூறியுள்ளார்.
2026 ஏப்ரலில் அவருக்கு விழித்திரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உடனேயே, அவர் மீண்டும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு அவரால் மிதமான வெளிச்சத்தைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விரைவில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால், அவர் தனது பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது உடல்நிலையை பரிசோதிக்க இருதயநோய் நிபுணர் மற்றும் கண்நோய் நிபுணர் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்தும், தன்னை ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றவும், குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை என்றும் இம்ரான் கான் கூறினார்.
தற்போது, தனிமைச் சிறை காரணமாக அவரது இரத்த அழுத்தம் 192-193 ஆக அதிகரித்து வருவதாகவும், அவரது இதயம் ஏற்கனவே சேதமடைந்துள்ளதால், அவருக்கு மூளை இரத்தக் கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"74 வயதில், இந்தச் சூழ்நிலைகள் என்னை வாழ முடியாத ஒரு நிலைக்குத் தள்ளுகின்றன. ஏழைகளுக்காக மருத்துவமனைகளைக் கட்டிய நான், இன்று எனக்கும் என் மனைவிக்கும் மருத்துவ உதவியைக் கோருகிறேன்.
நான் நிரபராதி என நிரூபிக்க நான் உயிருடன் இருக்க வேண்டும். எனவே, காலம் கடப்பதற்குள் மனிதாபிமான அணுகுமுறையுடன் நீதியை நிலைநாட்டுங்கள்" என்று இம்ரான் கான் நீதிபதிகளிடம் முறையிட்டுள்ளார்.