உலகம்

10 வயதில் அப்துல் கலாமின் ஆர்வத்தை தூண்டிய ஒற்றை கேள்வி.. உலக மாணவர் தினத்தின் சாரம்

உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக்கூட எதிர்காலம் உண்டு

அப்துல் கலாமின் பிறந்த தினம் ஏன் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை காண்போம்.

ஏவுகணை மனிதர் என அழைக்கப்படும் இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95வது பிறந்தநாள் இன்று.

2010ம் ஆண்டு அவரது பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15ம் தேதியை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.

பொக்ரான் அணுகுண்டு சோதனை உட்பட இந்தியாவின் விண்வெளி மற்றும் அறிவியல் துறை வளர்ச்சியில் கலாமின் பங்கு முதன்மையானது.

டாக்டர் கலாம், டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரோவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.

1983ல் தொடங்கப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்திலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்தத் திட்டம் பிருத்வி, அக்னி, திரிசூல், ஆகாஷ் மற்றும் நாக் போன்ற உள்நாட்டு ஏவுகணைகளுக்கு அடித்தளமிட்டது.

2002 முதல் 2007 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த கலாம் மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடத்து மாறா அன்பு கொண்டிருந்தார்.

காரணம், அவரின் சாதனைகளும் சிறு வயதில் அவர் கண்ட கனவால் தான் சாத்தியமானது. 2015 ஆம் ஆண்டு ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் மாரடைப்பால் மேடையிலேயே சரிந்து உயிரிழந்தார். அப்போது அவருக்கு 83 வயது.

அவர் இறுதிக் காலம் வரை ஒரு சிறுவனை போன்ற மாறா உற்சாகத்துடனும் ஆர்வத்துடன் அவர் இயங்கி வந்தார்.

கலாமை மாற்றிய கேள்வி

ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்னும் இயற்பெயர் உடைய அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் 10 வயதில் ஐந்தாம் வகுப்பு படித்தபோது, ​​அவருடைய ஆசிரியர் சிவசுப்பிரமணியம் ஐயர் அவரிடம், "பறவைகள் எப்படிப் பறக்கின்றன?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

மாணவர்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்று பறவைகள் காற்றில் தங்களை உந்திச் செல்ல இறக்கைகளையும், திசையை மாற்றிக்கொள்ள வால்களையும் பயன்படுத்துகின்றன என்று ஆசிரியர் விளக்கினார்.

இதேபோன்ற ஒரு தத்துவமே விமானத்தின் பறத்தலுக்கும் அடிப்படையாக உள்ளது என்றும் அவர் விளக்கினார்.

இந்த அனுபவம் கலாமின் மனதில் ஆழமாக பதிந்தது. அறிவியல் என்பது புத்தகங்களில் படிக்க வேண்டிய ஒரு பாடம் மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி என்பதையும் அவர் உணர்ந்தார்.

இந்த சுவாரஸ்யமான நிகழ்வு, 'Reignited: Scientific Pathways to a Brighter Future' என்ற அவரது புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறு வயதில், கலாம் செய்தித்தாள் விநியோகிக்கும் சிறுவனாகவும் பணியாற்றினார். அவர் அதிகாலையில் எழுந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து செய்தித்தாள் கட்டுகளைச் சேகரிப்பார்.

செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் விமானங்களின் படங்களைக் கண்டது அவரது ஆர்வத்தைத் தூண்டியது.

இவ்வாறு விமானத் தொழில்நுட்பம் மீது சிறுவயதிலேயே கொண்ட ஆர்வத்தால் அவர் இயற்பியலையும், அதைத் தொடர்ந்து ஏரோநாட்டிகல் பொறியியலையும் பயின்றார். இதுவே அவரை ஒரு விஞ்ஞானியாக தனது வாழ்க்கையைத் தொடங்க வழிவகுத்தது.

மாணவர்கள்

எனவே தான் ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் போதும் கனவு காணுங்கள்! அதற்கான முழு முயற்சியுடன் அர்ப்பணிப்போடு செயலாற்றுகள்! வெற்றி உங்களை வந்தடையும்! என்ற உற்சாகமூட்டும் வார்த்தைகளை மாணவர்களிடையே ஊட்டிவிட்டு ‌அவர்களின் எதிர்கால வாழ்க்கை நோக்கிய பயணத்தை ஊக்குவித்தார்.

‘உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக்கூட எதிர்காலம் உண்டு' என்று கூறி மாணவர்கள் மனதில் வாழ்க்கை மீது நம்பிக்கை விதைத்தார் .

எனவே தான் கல்வி பெறுவதற்கான சம வாய்ப்பு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை முன்னிறுத்தவே ஐக்கிய நாடுகள் அவை கடந்த 2010ஆம் ஆண்டில் இந்நாளை உலக மாணவர் தினமாக தெரிவுசெய்தது.

'உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாத வனுக்குக்கூட எதிர்காலம் உண்டு' என்று கூறி மாணவர்கள் மனதில் வாழ்க்கை மீது நம்பிக்கை விதைத்தார் .

எனவே தான் கல்வி பெறுவதற்கான சம வாய்ப்பு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை முன்னிறுத்தவே ஐக்கிய நாடுகள் அவை கடந்த 2010ஆம் ஆண்டில் இந்நாளை உலக மாணவர் தினமாக தெரிவுசெய்தது.

அப்துல் கலாமின் ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

*முடியும்வரை முயற்சி செய். உன்னால் முடியும் வரை அல்ல. நீ நினைத்த செயல் முடியும்வரை!

*உறங்கும்போது வருவது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு

* வெற்றி என்பது நம் நிழல்போல, வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அது நம் பின்னால் வரும்

*ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு சிறந்த நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம்

*நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

*தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கற்றலின் ஓர் அங்கமாக தவறுகளை அனுமதிக்கலாம்.

*சும்மாயிருப்பதிலும், அற்ப விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT