அமெரிக்காவில் BA.3.2 என அழைக்கப்படும் சிகாடா வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது ஓமிக்ரான் வைரஸின் ஒரு துணை வகையாகும்.
இந்த வகை வைரஸ் முதல்முதலில், கடந்த 2024-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா உள்ளிட்ட சுமார் 25 மாகாணங்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாத நிலவரப்படி உலகளவில் குறைந்தது 23 நாடுகளில் இது பரவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய வைரஸ்களை விட இதில் அதிகப்படியான மரபணு மாற்றங்கள் (சுமார் 70-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள்) இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில், நெதர்லாந்திலிருந்து வந்த ஒரு பயணியிடம் இந்த மரபணு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இது தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பையோ அல்லது தீவிரமான உயிரிழப்பையோ ஏற்படுத்தும் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.