உலகம்

சூழ்ந்த வெள்ளத்தில் தூணாக நின்ற வீடு... யாரு சாமி அந்த இன்ஜினியர் - இணையத்தை சூழ்ந்த கேள்வி!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.

நேபாள பெரு வெள்ளத்தின் பல காட்சிகள் நாளுக்கு நாள் வெளியாகி இணையத்தை உலுக்கி வருகின்றன. அதில் ஒரு வீடியோதான் பெருவெள்ளத்தில் ஒரு குடும்பத்தை தூணாக நின்று தாங்கிய வீட்டின் காட்சிகள்.

நான்குபுறமும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அருகில் இருந்த வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆனால் நடுவில் இருந்த இந்த ஒரு பச்சைவீடு மட்டும் எதற்கும் அசராமல் உறுதியுடன் நின்றது.

இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் பலரும் அந்த வீட்டின் பொறியாளருக்குதான் குடும்பத்தினர் நன்றிக்கூற வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.

நேபாள பெருவெள்ளம்

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, திரிசூலி ஆற்றுப் பகுதியில் திடீர் சேற்று வெள்ளம் சீறிப்பாய்ந்தது.

இந்த வெள்ளத்தில் நேபாளத்தின் ஏழு மாவட்டங்களில் பல்வேறு கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் தரைமட்டமாகி அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போதுவரை பாதிப்பின் அளவை கணக்கிட முடியவில்லை.

இந்நிலையில் வெள்ளத்தில் இந்த ஒரு வீடு மட்டும் அசைக்க முடியாமல் கம்பீரமாக நின்றது. கீழ் தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் வெள்ளத்தால் சூழ பால்கனியில் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்தனர்.

இப்போதும் அந்தக் காட்சிகளை நினைத்தால், பார்த்தால் மனம் பதறுகிறது. தற்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக உள்ளனர்.

வீடு விழாமல் இருந்ததற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் முதல் காரணம் உறுதி. வீட்டை தரமாக கட்டிய பொறியாளர் என அந்த பொறியாளருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மற்றொரு காரணம் வெள்ளம் ஒரே பக்கத்தில் விரைவாக சென்றுக் கொண்டிருந்தது.

வீட்டின் முன்புறமும் வெள்ளநீர் ஓடிக்கொண்டிருந்தாலும், வெள்ளத்தில் அடித்து கொண்டுவரப்பட்ட கற்கள், பொருட்கள், சேறு ஆகியவை முன்புறம் நின்று வீட்டை தாங்கிக்கொண்டன. இதனால் முன்புறம் வீடு சாய்வதற்கான சாத்தியக்கூறு அபாயங்கள் தவிர்க்கப்பட்டன.