டி-ரெக்ஸ் என்பவை சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் வகை ஆகும்.
இவற்றின் படிமங்களில் இருந்து எடுக்கப்பட்ட கொலாஜன் புரதத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் டைனோசர் தோலில் செய்யப்பட்ட ஹேண்ட் பேக் (கைப் பை) தயாரிக்கப்பட்டுள்ளது.
டைனோசர் படிமங்களில் இருந்து புரதத் துண்டுகளைப் பிரித்தெடுத்து, அவற்றை மற்ற விலங்குகளின் செல்களில் செலுத்தி கொலாஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அது தோலாக மாற்றப்பட்டு இந்த பேக் தைக்கப்பட்டுள்ளது.
ஆர்கனாய்டு என்ற ஜீனோமிக் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் வி.எம்.எல் என்ற கிரியேட்டிவ் ஏஜென்சி ஆகியவை இணைந்து இதை உருவாக்கி உள்ளது.
இதே குழுதான் இதற்கு முன்பு மாமூத் யானையின் டிஎன்ஏ மற்றும் ஆட்டு செல்களைக் கலந்து ஒரு ராட்சத Meatball உருவாக்கிச் செய்திகளில் இடம்பிடித்தது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள டைனோசர் தோல் ஹேண்ட் பேக் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள Art Zoo அருங்காட்சியகத்தில், நிஜமான டி-ரெக்ஸ் எலும்புக்கூட்டிற்கு அடியில் மே 11 வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இது ஏலம் விடப்பட உள்ளது.
இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, டைனோசர் எலும்புகளில் உள்ள கொலாஜன் மிகவும் சிதைந்த நிலையில் மட்டுமே இருக்கும் என்றும், அதை வைத்துத் தோலை மறுசீரமைப்பு செய்வது சாத்தியமற்றது என்று சில அறிவியலாளர்கள் இந்த ஹேண்ட் பேக் உடைய உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.