ஈரான்மீது 'ஆபரேஷன் ரோரிங் லயன்', 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை கடந்த பிப்ரவரி முதல் முன்னெடுத்து வருகிறது.
இந்த கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் உச்சப்பட்சத் தலைவர் அயதுல்லா அலி கமெனி, ஈரான் பாதுகாப்புச் செயலர், துணை ராணுவ தளபதி என பல முக்கியத் தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இருந்தும் ஹார்முஸ் அமெரிக்கவுடனான ஒப்பந்தங்கள், ஜலசந்தி திறப்பு உட்பட தற்போதுவரை எதற்கும் ஒப்புக்கொள்ளாமல் தன் முடிவில் உறுதியாக இருந்து அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்துவருகிறது ஈரான்.
இதனிடையே இப்போரால் உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக கடுமையான மிரட்டலை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில்,
"ஒரு முழு நாகரிகமே இன்று இரவு அழியப்போகிறது, அது மீண்டும் எழாது. அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் அதுதான் நடக்கும் போலிருக்கிறது. இருப்பினும், இப்போது நம்மிடம் ஒரு முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் தீவிரத்தன்மை குறைந்த சிந்தனையாளர்கள் மேலோங்கி இருப்பதால், ஒருவேளை புரட்சிகரமான, அற்புதமான ஏதோ ஒன்று நிகழலாம்.
யாருக்குத் தெரியும்? உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான அதை இன்று இரவு நாம் தெரிந்துகொள்வோம். இதன்மூலம் ஈரானின் 47 ஆண்டுகால மிரட்டல், ஊழல் முடிவுக்கு வரும். ஈரான் மக்களுக்கு கடவுள் ஆசி வழங்கட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.