உலகம்

பிலிப்பைன்ஸ்: புதிதாக கட்டப்பட்ட 9 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: பலர் சிக்கியிருப்பதாக அச்சம்

பிலிப்பைன்ஸில் புதிதான கட்டப்பட்டு வந்த 9 மாடி கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானதில், பலர் இடுபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவிற்கு வடக்கே உள்ள ஏஞ்சல்ஸ் நகரின் பாலிபாகோ பகுதியயில் உள்ள தியோடோரோ தெருவில் 9 மாடி கட்டிடத்தின் ஹோட்டல் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3:00 மணியளவில் அந்த பகுதியில் கடுமையான இடி, மின்னலுடன் கூடிய பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்துள்ளது. அந்த நேரத்தில் கட்டிடத்தின் சுவர்களும், சாரங்களும் தாங்கமுடியாமல் பயங்கர சத்தத்துடன் ஒட்டுமொத்தமாக சரிந்து தரைமட்டமானது.

கட்டிடம் சரிந்து விழுவதைக் கண்ட கட்டுமான மேஸ்திரி மற்றும் 22 தொழிலாளர்கள் அலறியடித்தபடி கட்டிடத்தை விட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த குடியிருப்புகள் மற்றும் தெருவில் சென்ற 24 பேரும் உயிர் தப்பினர்.

கட்டிடத்தின் அடித்தள பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் முகாம்கள் இருந்ததாகவும், 30 முதல் 40 தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்தார்கள் என்றும் உயிர் தப்பிய மேஸ்திரி இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்மெலோ லாசாடின் தலைமையில், 100 க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கட்டிடம் முழுவதும் கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகளால் ஆனது என்பதால், இடிபாடுகளை அகற்றுவதற்கு கனரக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. விபத்தின்போது மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், மீட்புப் படையினருக்கு மின்சார அதிர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஏஞ்சலஸ் நகர பொறியாளர் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கட்டிடத்தின் அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கட்டுமான தரம் குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த ஏஞ்சலஸ் நகரம், 1990 வரை அமெரிக்க விமானப்படையின் மிகப்பெரிய தளமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.