அமெரிக்காவில் காணாமல் போன 72 வயது இந்திய வம்சாவளிப் மூதாட்டி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திலிருந்து காணாமல் போன 72 வயது இந்திய வம்சாவளிப் மூதாட்டி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர் அஜித் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 23 அன்று கலிபோர்னியாவில் செரஸ் நகரில் உள்ள காசா கிராண்டே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திலிருந்து நடைபயிற்சியின்போது அஜித் கவுர் காணாமல் போனார்.
அதிகாலை சுமார் 1.45 மணியளவில், நகரில் உள்ள விட்மோர் அவென்யூ மற்றும் மிட்செல் சாலைக்கு அருகே அவர் கடைசியாகக் காணப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அக்டோபர் 22 அன்று காவல்துறை இந்தத் தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.
விசாரணையின் போது, அஜித் கவுர் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கால்வாயில் நுழைந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகித்தது.
இதையடுத்து செரஸ் நகரில் கால்வாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சென்ட்ரல் அவென்யூ மற்றும் கீஸ் சாலைக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து அவர் சடலத்தை கண்டுபிடித்தனர்.
இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய குற்ற பின்னணி எதுவும் இல்லை என்று செரஸ் நகர காவல்துறை முதற்கட்டமாக தெரிவித்துள்ளது.
அஜித் கவுருக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருந்தது. அவர் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தற்செயலாக கால்வாய்க்குள் தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இது ஒரு விபத்தாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் துல்லியமான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.