அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் விஸ்கான்சின் டெல்ஸ் அருகே காட்டுப் பகுதியில் விமானமானது விபத்துக்குள்ளானதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 இருக்கைகள் கொண்ட ஒற்றை இன்ஜின் பைபர் பிஏ 46 விமானமான அது கெனோஸாவில் இருந்து மெனோமோனி நோக்கி சென்று கொண்டிருந்தபோது டெலோனா நகரின் அருகே இரவு 10 மணியளவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அவசரகால ஊழியர்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 6 உடல்களை கண்டெடுத்தனர்.
அப்பகுதியில் இடியுடன் மழை பெய்து வருவதால் வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
விபத்துக்கு முன் விமானம் அருகில் உள்ள ஏர் டிராபிக் கண்ட்ரோல் சென்டரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளது. எனவே அந்த பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்தால் தரையில் இருந்த யாருக்கும் காயமோ கட்டமைப்புகளுக்கு பாதிப்போ இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 6 பேரின் அடையாளமும் வெளியிடப்பட்டுள்ளது.