தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கு பசிபிக் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. இது பெரு நாட்டின் ஐகா பகுதிக்குட்பட்ட 'பம்பா டி ததே' என்ற நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 56.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஐகா மாகாணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. பல கட்டிடங்களின் சுவர்களில் பெரிய விரிசலும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அங்குள்ள புகழ்பெற்ற சான் லூயிஸ் கொன்ஜகா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு முக்கியக் கட்டிடங்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இதன் அதிர்வை உணர்ந்த மக்கள் அனைவரும் கட்டிடங்களில் இருந்து வெளியேறி தெருக்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 27 பேர் காயமடைந்துள்ளதாகப் பெரு நாட்டின் அவசரக்கால மீட்புப்படை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் பெரு நாட்டின் பாதுகாப்பு மந்திரி அமதியோ புளோரெஸ், பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அவசரக்கால நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள அதிதீவிர நில அதிர்வு மண்டலமான பசிபிக் ரிங் ஆஃப் ஃபயரில் (Ring Of Fire) பெரு நாடு அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி இது போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் (Pacific Ring of Fire) என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள ஒரு குதிரை லாட வடிவிலான பகுதியாகும். இது அதிக எண்ணிக்கையிலான எரிமலைகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியாக அறியப்படுகிறது. உலகின் மொத்த எரிமலைகளில் 75% இங்கு உள்ளன.
இது சுமார் 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு தொடர்ச்சியான வளையமாகும். நியூசிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், அலாஸ்கா, மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வழியாக தென் அமெரிக்காவின் சிலி வரை இது பரவியுள்ளது.