உலகம்

5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள் மூலம் பரப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: கூகுளிடம் விளக்கம் கேட்கும் இந்திய காவல்துறை!

குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக இருவரைக் கைது செய்தனர்.

பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும்.

குஜராத் மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு அடுத்தடுத்து வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் காவல்துறை, இதன் பின்னணியில் இருந்த மிகப்பெரிய குற்றப் பின்னணி வலையமைப்பை கண்டறிந்து முடக்கியுள்ளது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி ஜிமெயில் கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு அச்சுறுத்தல்

கடந்த 10-ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, குஜராத் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அத்துடன் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில், அவை அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.

5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள்

வழக்கை விசாரித்த குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2022-ஆம் ஆண்டு முதல் சுமார் 5,13,847 போலி ஜிமெயில் கணக்குகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்களை உருவாக்கி ஒரு சர்வதேச நெட்வொர்க் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி கணக்குகள் வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் கிரிப்டோகரன்சி வடிவில் பணம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் குறைபாடுகள்

பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும். ஆனால், இந்த போலி கணக்குகள் அனைத்திலும் இந்த பாதுகாப்பு முறையை குற்றவாளிகள் எவ்வாறு எளிதாக கடந்து சென்றார்கள் என்பது காவல்துறைக்கு பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தங்களது தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யவும், கொள்கை மாற்றங்களைச் செய்யவும் வலியுறுத்தி கூகுள் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுத குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையில் கூகுள் நிறுவனத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பக் குற்றங்கள் மூலம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும் நிலையில், கூகுள் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கேள்வி குறியாகியுள்ளன.

SCROLL FOR NEXT