சீனாவில், தவறுதலாக 50 கிராம் எடையுள்ள தங்க கட்டியை விழுங்கிய ஐந்து வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, மருத்துவர்கள் சிறுமியின் உடலில் இருந்த தங்க கட்டியை பத்திரமாக அகற்றினர்.
சீனாவின் வடக்கு பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர், அங்கு இருந்த 4 சென்டிமீட்டர் நீளத்தில் 50 கிராம் எடையுள்ள சிறிய தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அந்த மருத்துவமனையில் தங்க கட்டியை அகற்றும் கருவி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை பெற்றோர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்பிட்டல் மெடிசின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது அந்த சிறுமியின் வயிற்றை மருத்துவர்கள் எக்ஸ்-ரே சோதனை செய்து பார்த்தனர். இதையடுத்து சிறுமியின் வயிற்றில் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள தங்க கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த தங்க கட்டியானது சிறுமி வயிற்றின் உள்சவ்வை கீறி, கடுமையான உள் இரத்தப்போக்கு மற்றும் உறுப்புகளில் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம்
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், அந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தது.
மேலும் மருத்துவமனை நிர்வாகம், “அந்த தங்க கட்டியானது கடினமாகவும், அடர்த்தியாகவும், வழுவழுப்பான மேற்பரப்புடனும் இருந்ததால், அது செரிமானப் பாதையில் எளிதில் சிக்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
அதனை கவனிக்காமல் விட்டால், அந்த தங்க கட்டியானது வயிற்றின் உள்சவ்வைக் கீறி, கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுத்திருக்கும்.
அந்த தங்கக் கட்டி, அறுவை சிகிச்சை செய்வதற்கு மிகவும் குறுகலான இடமான சிறுமியின் இரைப்பைக் குழியில் சிக்கியிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அப்படியிருந்தும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போதே எண்டோஸ்கோபி செய்து, ஒரு சுருக்குக் கயிற்றின் உதவியால் அந்த தங்க கட்டியை மீட்டு, கவனமாக இரைப்பை குழியிலிருந்து வெளியே எடுத்தனர்.
மருத்துவர் குழு தங்கக் கட்டியை அகற்ற சில நிமிடங்களே ஆனது, ஆனால் அது ஒரு நுட்பமான அறுவை சிகிச்சையாக இருந்தது.
அந்த சிறுமியும் குணமடைந்துவிட்டார், மேலும் அவரது முக்கிய உடல் அறிகுறிகள் அனைத்தும் சீராக உள்ளன,” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த மருத்துவ நடவடிக்கை குறித்த செய்தி இணையத்தில் வைரலானதும், அந்த சிறுமிக்கு விலை உயர்ந்த தங்க கட்டி எப்படி கிடைத்தது என்று பயனர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பெற்றோர் அந்த பொருளைச் சிறுமிக்கு எட்டாதவாறு வைத்திருக்க வேண்டும் என்று கூறினர்.
ஐந்து வயது குழந்தை 50 கிராம் தங்கக் கட்டியை எளிதில் எடுக்கும் அளவுக்கு இருந்த நிகழ்வு, அந்த குடும்பம் எவ்வளவு செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதை காட்டுவதாக பதிவிட்டனர்.
பொறுப்புள்ள பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளின் நடத்தையை கண்காணித்து, அபாயகரமான பொருட்களை அவர்கள் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும் என்று பயனர்கள் வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர்.