491 நாட்கள் போர் முனையில் சிக்கித் தவித்த உக்ரைன் வீரர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்
உக்ரைன் - ரஷியா போர் கடந்த 2022 முதல் முடிவின்றி நடந்து வரும் நிலையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயந்துள்ளனர்.
உக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன், மற்றும் ரஷியா இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழப்பும் படுகாயங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் போர்க்களத்தில் தனது இரு கால்களையும் இழந்து 491 நாட்கள் தவித்த உக்ரேனிய வீரர் ஒருவர், ராட்சத டிரோன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
உக்ரேனின் 30வது மெஷினரி படைப்பிரிவு வீரர் கான்ஸ்டான்டின் விளாசென்கோ (49) காப்பாற்றப்பட்டது பெரும் அதியசமாக பார்க்கப்படுகிறது.
வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு டிரோன் மூலம் வான்வழியாக உயிருடன் மீட்கப்பட்டவரும் அவரே என்று கூறப்படுகிறது.
ஜூன் 2025 இல், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள குபியான்ஸ்க் அருகே வெர்டன் எனும் போர் முனைக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவருடன் இருந் சக வீரர் பிப்ரவரி 2026 இல் நடந்த ரஷிய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் விளாசென்கோ தனது இடது காலை இழந்திருந்தார். வலது காலும் படுகாயமடைந்த நிலையில் தொற்று ஏற்பட்டு உடலில் பரவிவிட கூடாது என்பதற்காக தன் வலது காலை அவரே கத்தியால் வெட்டிக் கொண்டார்.
தனித்து விடப்பட்ட விளாசென்கோ, ரஷிய குண்டுவீச்சில் இடிந்து விழுந்த ஒரு பழைய பள்ளிக் கட்டிடத்தின் பாய்லருக்கு அடியில் 80க்கு 60 சென்டிமீட்டர் மட்டுமே அளவுள்ள ஒரு சிறிய குழியில் அவர் சுமார் 8 மாதங்களாக தஞ்சம் புகுந்திருந்தார்.
முக்கியமான போர் முனை என்பதால் ரஷிய டிரோன்கள் அவர் இருந்த பகுதியை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தன. எனவே தரைவழியாக அவரை மீட்பது உக்ரைன் ராணுவத்துக்கு சாத்தியமற்றதாக இருந்தது.
அவரைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட இரண்டு தரைவழி ரோபோக்களும் தாக்குதலில் அழிக்கப்பட்டன.
இதனால், உக்ரேன் ராணுவம் சிறிய டிரோன்கள் மூலம் அவருக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் அனுப்பி வந்தது. பொழுதுபோக்கிற்கு வாசிக்க ஒரு ஸ்டீபன் கிங் நாவலையும் அனுப்பியுள்ளது.
இறுதியாக கடந்த அக்டோபர் 4 அன்று, மனித எடையைச் சுமக்கும் திறன் கொண்ட Ayudag 6 என்ற ராட்சத டிரோனை உக்ரேன் ராணுவம் அனுப்பி வைத்தது.
அதில் கட்டப்பட்ட சிறப்பு கயிற்றில் கான்ஸ்டான்டின் தன்னை இணைத்துக்கொண்டார்.
அந்த டிரோன் வான்வழியே சுமார் 70 மீட்டர் உயரத்திற்கு அவரை தூக்கிக்கொண்டு, 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து பத்திரமான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.
போர் வரலாற்றிலேயே, காயமடைந்த ஒரு ராணுவ வீரர் போர்முனையில் டிரோன் மூலமாக வெற்றிகரமாக மீட்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
தற்போது அவர் கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.