உலகம்

நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு

விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.

நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் பலியாயினர். அதனை காய்ச்சிய 15 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

மலிவு விலை சாராயம்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வறுமை மற்றும் பொருளாதார காரணங்களால், அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை வாங்க முடியாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள், உள்ளூர் அளவில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் மலிவு விலை சாராயங்களை வாங்கி அருந்துவது வழக்கமாக உள்ளது.

இத்தகைய சாராயங்களில் வீரியத்தை அதிகரிக்க ஆபத்தான வேதிப்பொருட்களைக் கலப்பதால், விஷச்சாராயமாக மாறி அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில், நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.

48 பேர் பலி

ஆனால், அவர்கள் குடித்த சாராயத்தில் உயிருக்கு ஆபத்தான 'மெத்தனால்' என்ற நச்சு வேதிப்பொருள் கலக்கப்பட்டு அது விஷசாராயமாக மாறியது பின்னர் தெரியவந்தது.

அவர்கள் விஷசாராயம் அருந்திய சில மணி நேரங்களிலேயே பலருக்கு கடுமையான வயிற்று வலி, கண் பார்வை மங்குதல், மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

நச்சு கலந்த இந்த விஷச்சாராயத்தைக் குடித்தவர்களில் இதுவரை 48 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணை

இது குறித்து அந்த மாகாண சுகாதாரத்துறை ஆணையர் பன்ஜி அஜாகா கூறுகையில், "இந்த விஷசாராயத்தைக் குடித்தவர்களின் சிறுநீரகம், மூளை மற்றும் கண்கள் மிக வேகமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 182 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நைஜீரிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி, விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்த விஷச்சாராய மரணங்கள் நைஜீரியா நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT